Published : 05 Sep 2023 06:51 AM
Last Updated : 05 Sep 2023 06:51 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

இகா ஸ்வியாடெக்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 105-ம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோர்ஜோவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-2, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 110-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகதாவையும், 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 7-6 (7-2), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 128-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் டொமினிக் ஸ்டிரைக்கரையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர். 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 4-6, 3-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 47-ம் நிலை வீரரான பென் ஷெல்டனிடம் தோல்வி அடைந்தார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 20-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் 6-3, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் நம்பர் ஒன் இடத்தையும் ஸ்வியாடெக் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியையும், 30-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 15-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்கையும், 10-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா முச்சோவா 6-3, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் ஸின்யூவையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x