Published : 04 Sep 2023 01:17 PM
Last Updated : 04 Sep 2023 01:17 PM

ஸ்ரீகாந்த் சொன்னது போலவே ‘ஃப்ரீ விக்கெட்’ ஆன ரோஹித் சர்மா | எது சிறந்த வேகப்பந்து கூட்டணி?

இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக அதிரடி முன்னாள் தொடக்க வீரரும் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரோஹித் சர்மா பேட்டிங்கை விமர்சித்தார். அதாவது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்விங் ஆகும் புதிய பந்தில் ரோஹித் சர்மா எளிதாக வீழ்ந்து விடுவார், ஆகவே இஷான் கிஷனை இறக்க வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.

அன்று குறிப்பாக ஷாஹின் அஃப்ரீடிக்கு எதிராக ரோஹித் சர்மா ஆடியது ஸ்ரீகாந்த் சொன்னது போலத்தான் இருந்தது. முதலில் அடித்த பிளிக் ஷாட் பவுண்டரியே பந்து காற்றில் சென்றது. ஸ்கொயர் லெக்கிற்கு வைடாகச் சென்றது. இந்த பிளிக்கை காஷுவலாக அடித்தார் ரோஹித் சர்மா. இவரது காஷுவலான இந்த அணுகுமுறையைத்தான் இதுகாறும் நாம் ‘lazy elegance' என்று ஹைப் கொடுத்து வந்தோம்.

பிறகு முதல் ஓவரிலேயே ஷாஹின் ஷா அஃப்ரீடியின் இன்ஸ்விங்கரை ரோஹித் சர்மாவால் கணிக்க முடியாமல் மட்டையின் உள்விளிம்பில் இருமுறை வாங்கினார். ஆனால் ஷாஹின் அஃப்ரீடியை அடித்த இன்னொரு பிளிக் அருமையான ஷாட்தான். பிறகு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரோஹித் சர்மாவைக் கடந்து 2 பந்துகள் சென்றன. மழை இடைவேளைக்குப் பிறகு ஷாஹின் அஃப்ரீடி தொடர்ந்த போது உள்ளே வந்த பந்தை தடுத்தாடினார்.

இன்ஸ்விங்கரை எதிர்பார்த்த ரோஹித் சர்மாவுக்கு அடுத்த பந்தை குட் லெந்தில் பிட்ச் செய்து வெளியே ஸ்விங் செய்தார் ரோஹித் சர்மா பீட்டன் ஆனார். அடுத்த பந்து காற்றில் லேசாக உள்ளே வந்து பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆனது மீண்டும் பீட்டன் ஆனார் ரோஹித் சர்மா. அடுத்த பந்து ஃபுல் லெந்த் ஆனால் ஆஃப் வாலி கிடையாது இந்த முறை ஸ்டம்பில் பிட்ச் ஆன பந்து ரோஹித் சர்மாவின் மட்டைக்கும் அவரது கால்காப்பிற்கும் இடையே பெரிய இடைவெளி பந்து புகுந்து கிளீன் பவுல்டு ஆனார் ரோஹித். பிறகு விராட் கோலியும் பேக் அண்ட் அக்ராஸ் சென்று ஆட வேண்டிய அஃப்ரீடி பந்தை நின்ற இடத்திலிருந்தே மட்டையை மட்டும் நீட்டி தேர்ட் மேனில் ஒரு சுலபமான சிங்கிளை எடுக்கலாம் என்று பார்த்து இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். இதில் முக்கியமானது என்னவெனில் ரோஹித் சர்மா விக்கெட் குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அன்றே சொன்னதுதான். ஃப்ரீ விக்கெட் ஆகிப்போனார் ரோஹித் சர்மா.

விராட் கோலி மிகவும் காஷுவலாக ஒரு ஷாட்டை அலட்சியமாக ஆடினார், பொறுப்பற்ற முறையில் ஆடினார் என்றே கூற வேண்டும். ஷாஹின் அஃப்ரீடி மீண்டும் இந்தியாவை ஆட்டிப்படைத்ததோடு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 300 ரன்கள் போயிருக்க வேண்டிய ஸ்கோரை 266 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார். இதன் பிறகு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு நோ-ரிசல்ட் ஆனது.

இந்நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறந்ததா, இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறந்ததா என்ற ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது, இதற்கு தினேஷ் கார்த்திக் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஒரு ஃபிளாட் பிட்சில் பாகிஸ்தானின் ஷாஹின் அஃப்ரீடி, ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா வேகப்பந்து கூட்டணி பவர் ஃபுல் கூட்டணி என்றே கருதுகிறேன். மூவரும் சீரான முறையில் 90+ மைல் வேகத்தை அனாயசமாக எட்டுகின்றனர். மேலும் மூவருமே வித்தியாசமான பவுலர்கள். ஷாஹின் அஃப்ரீடி பந்தை உள்ளேயும் பயங்கரமாகக் கொண்டு வருபவர், நசீம் ஷா இரு புறமும் ஸ்விங் செய்பவர், நல்ல வேகமும் உண்டு. இன்றைய தேதியில் ஹாரிஸ் ராவுஃப் ஒரு சிறந்த பவுலர். முடிவு ஓவர்களில் சறுக்கிக் கொண்டு செல்லும் இவரது பந்துகளும் எழும்பும் பந்துகளும் அபாயகரமானவை.

பிட்சில் ஏதாவது கொஞ்சம் வாய்ப்பு இருந்தால் இந்திய பந்து வீச்சு கூட்டணியான பும்ரா, ஷமி, சிராஜ் கூட்டணியும் அபாயகரமானவர்கள்தான், ஆனால் ஃபிளாட் பிட்சிலும் கூட பாகிஸ்தான் மூவர் கூட்டணி அபாயகரமான பவுலர்கள். ஒரு பேட்டராக என்னைக் கேட்டால் பும்ரா, ஷமி, சிராஜை ஆடுவதற்கு நான் விரும்புவேன், ஏனெனில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை விட இவர்களிடம் பவுன்ஸ் கொஞ்சம் குறைவுதான். எனவே யாரை ஆட விரும்புவேன் என்றால் இந்திய பவுலர்களையே ஆட விரும்புவேன், பாகிஸ்தான் பவுலர்களை ஆடுவது கடினமே” என்கிறார் தினேஷ் கார்த்திக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x