Published : 04 Sep 2023 06:10 AM
Last Updated : 04 Sep 2023 06:10 AM

ஆசியக் கோப்பை கிரிக்கெட் | இந்தியா - நேபாளம் இன்று மோதல்: மழையின் அச்சுறுத்தலில் போட்டி

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நேபாள அணியின் கேப்டன் ரோஹித் பவுடேல்

பல்லகெலே: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று பலம்வாய்ந்த இந்திய அணியுடன், நேபாள அணி மோதவுள்ளது. பல்லகெலே நகரில் இன்று மழைப்பொழிவு இருக்கும் என்பதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடரில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும்.

அதனால் இந்திய அணி, இன்று வெற்றி பெறுவதற்கு முழுமூச்சுடன் போராடும். பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் கேப்டன் ரோஹித்சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரிடமிருந்து எதிர்பார்த்த உயர்மட்ட செயல்திறன் வெளிப்படவில்லை. எனவே, இன்றைய ஆட்டத்தில் இவர்களிடமிருந்து அதிரடி ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம். இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஆகியோரிடமிருந்து மற்றுமொரு அதிரடி இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

பவுலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி எளிதாகும்.

இந்திய அணியுடன் ஒப்பிடும்போது நேபாள அணி, பலம் குறைந்ததாகவே காணப்படுகிறது. பாகிஸ்தானுடனான ஆட்டத்தின்போது அந்த அணியின் பவுலிங், பேட்டிங் என எதுவுமே எடுபடவில்லை. எனவே, இந்திய அணியுடனான ஆட்டத்தில்தங்களது செயல்திறனை வெளிப்படுத்த அவர்கள் முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நேபாளத்துக்கு எதிரான இந்தியாவின் அடுத்த ஆட்டத்திலும் மழையின் அச்சுறுத்தல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பல்லகெலேயில் இடியுடன் கூடிய மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியா - நேபாளம் ஆட்டம் முழுமையாக நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஏ பிரிவில் புள்ளி பட்டியலில் இந்தியா ஒரு புள்ளியுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது.

மழையால் ஆட்டம் ரத்தானால்? மழை காரணமாக இந்தியா-நேபாள அணிகள் இடையேயான ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததால் நேபாளம் அணி தொடரை விட்டு வெளியேறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x