Published : 23 Dec 2017 10:12 AM
Last Updated : 23 Dec 2017 10:12 AM
கோவையில் நேற்று நடைபெற்ற ‘ஹீரோ ஐ லீக் 2017’ கால்பந்துப் போட்டியில் கிங்ஃபிஷர் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. கடுமையாகப் போராடிய போதிலும் 2-1 என்ற கணக்கில் வெற்றியைத் தவறவிட்டது சென்னை சிட்டி அணி.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை சிட்டி - கிங்ஃபிஷர் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. போட்டியை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ், ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும், சென்னை சிட்டி கால்பந்து அணித் தலைவருமான ரோஹித் ரமேஷ், இணைத் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஏராளமான ரசிகர்கள் பார்வையிட்டனர்.
உள்ளூர் களம் என்பதால் சென்னை அணிக்கு அதிக ஆதரவு இருந்தது. எனினும் போட்டி தொடங்கிய 27-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியைச் சேர்ந்த கட்சுமி யூசா முதல் கோலை அடித்தார். அடுத்த 4-வது நிமிடத்தில் அதே அணி வீரர் சார்லஸ் டிசூசா இரண்டாவது கோலை அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடிவதற்கு 2 நிமிடங்கள் இருந்த நிலையில், சென்னை சிட்டி அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின் அலெக்ஸாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் இந்த கோலை அடித்தார்.
முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கல் ஈஸ்ட் பெங்கால் அணி முன்னணியில் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணிகளும் பெரிதும் முயன்றன. ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் கிங்ஃபிஷர் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிசு வழங்கினார்.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் அடுத்த போட்டி வரும் ஜனவரி 9-ம் தேதி நடைபெறுகிறது. இதில் சென்னை -நேரோகா அணிகள் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT