Published : 16 Dec 2017 05:19 PM
Last Updated : 16 Dec 2017 05:19 PM
பெர்த் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து பந்து வீச்சை மைதானம் நெடுக சிதறடித்து ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஜோடி ஆட்டமிழக்காமல் 5-வது விக்கெட்டுக்காக இதுவரை 301 ரன்களைச் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 549 ரன்கள் குவித்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்தைக் காட்டிலும் 146 ரன்கள் முன்னிலை வகிக்கும் ஆஸி. அணியில் ஸ்டீவ் ஸ்மித் 390 பந்துகளில் 28 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 229 ரன்கள் எடுத்தும் முதல் டெஸ்ட் சதம் கண்ட மிட்செல் மார்ஷ், 234 பந்துகளில் 29 பவுண்டரிகளுடன் 181 ரன்களையும் குவித்து நாட் அவுட்டாக இருக்கின்றனர்.
4-ம் நாள், 5-ம் நாள் மழை பெய்யலாம் என்ற வானிலை முன்னறிவிப்பு உள்ளதால் இப்போதைக்கு இங்கிலாந்து அணியினர் Waiting for Godot போல் மழைக்கடவுளை வரவேற்கக் காத்திருக்கின்றனர். வேறு வழி தெரியவில்லை. காரணம் நாள் முழுதும் ஒரே விக்கெட்தான், அதுவும் நல்ல வேளையாக ஷான் மார்ஷை (28) மொயின் அலி வீழ்த்தினார். மற்றபடி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஒரு எல்.பி. வாய்ப்பு நோபாலில் ஸ்மித்துக்குச் சாதகமாக, ஒன்றிரண்டு பந்துகள், அதிகமில்லை ஜெண்டில்மேன், ஒன்றிரண்டு பந்துகள் ஸ்மித்துக்கு எட்ஜ் ஆகி ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது, மற்றபடி ஸ்மித் சுதந்திரப் பறவையாக ஆடினார்.
ஒருவேளை மழை வந்து டெஸ்ட் டிரா ஆகி விட்டால், ஆஷஸ் கோப்பையை வைத்திருக்கும் அணி என்று இங்கிலாந்து பக்கம் ஒரு 10% நம்பிக்கை துளிர் விடும், அதாவது அடுத்த டெஸ்ட் போட்டிக்கான எனெர்ஜி அது. ஆனால் மனத்தளவில் அந்த அணியினருக்கு பெரிய அடி விழுந்துள்ளது. இது போன்ற பேட்டிங் ஆதிக்கத்தை எந்த ஒரு இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவில் சந்தித்திருக்குமா என்பது ஆய்வுக்குரியது.
203/3 என்று தொடங்கியது ஆஸ்திரேலியா, ஸ்மித் உடனடியாகவே தன் 22-வது சதத்தை எடுத்தார். இன்று ஒரு விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. ஸ்மித் ஆட்டம் சரி, ஆனால் 22 டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் கண்ட மிட்செல் மார்ஷ் எப்படி இரட்டைச் சதத்துக்கு அருகில் வந்துள்ளார்? நிச்சயம் ஜோ ரூட் கேப்டன்சி, இங்கிலாந்து பேட்டிங் என்று நிறைய கேள்விகளை அந்த அணியினர் வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டி வரும்.
இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சு கடும் ஏமாற்றமளித்தது, இவர்கள் இருவருடன் மொயின் அலி ஓவர் டன் ஆகியோரும் பந்து வீச்சில் சதம் அடித்தனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் 85 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார், இவரும் சதம் கண்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இது 8-வது முறை, ஒரு அணியில் 5 பவுலர்கள் 100-க்கும் மேல் ரன்களை விட்டுக் கொடுப்பது என்ற நிகழ்வு சாத்தியமாகும்.
நூற்றுக்கணக்கான அசைவுகளில் நகர்ந்து நகர்ந்து கவர் டிரைவ், பிளிக், ஆன் டிரைவ் என்று ஸ்மித்தை நிறுத்த முடியவில்லை. 138 பந்துகளில் தன் சொந்த வேக சதத்தை எட்டினார். மிட்செல் மார்ஷ் இறங்கியவுடன் பதற்றத்தில் ஒரு பந்தை அறியாமல் தூக்கினார், ஆனால் அது ஆளில்லா இடத்தில் விழுந்தது. ஆனால் அதன் பிறகு கட், டிரைவ், சிப் ஷாட்கள் என்று அசத்தினார், தேநீர் இடைவேளைக்கு முதல் ஓவரில் தன் முதல் சதத்தை அரங்கேற்றினார், பெர்த் அவரது சொந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரோட்டமில்லாத பிராட் பந்து வீச்சில் 2 பவுண்டரிகளை பாயிண்டில் அடித்து சதம் கண்டார். 130 பந்துகளில் அதிரடி சதமாக அது அமைந்தது.
ஸ்மித் தன் இரட்டைச் சதத்தை எடுத்தார், ஆஷஸ் தொடரில் இரட்டைச் சதம் காணும் 5-வது கேப்டனானார் ஸ்மித், முன்னதாக பில்லி முர்டாக், டான் பிராட்மேன், பாப் சிம்சன், ஆலன் பார்டர் ஆகியோர் இரட்டைச் சதம் கண்ட கேப்டன்கள். இந்தத் தொடர் முடிந்தவுடன் ஸ்மித் பேட்டிங் அசைவுகள் இங்கிலாந்து அணியினரின் கனவுக்குள் புகுந்து அச்சுறுத்தும் என்றே தெரிகிறது.
மிட்செல் மார்ஷும் இரட்டைச் சதத்துக்கு அருகில் உள்ளனர், நாளை ஆஸ்திரேலிய அணியின் டிக்ளேரையும், மழையையும் எதிர்நோக்குகிறது இங்கிலாந்து. ஒருவேளை தோல்வியிலிருந்து இந்த டெஸ்ட்டை இங்கிலாந்து காப்பாற்றலாம், ஆனால் உளவியல் ரீதியாக பெரிய சோர்வை இந்தப் போட்டி இங்கிலாந்து அணியினடத்தில் ஏற்படுத்தியிருந்தால் அதற்குக் காரணம், அவர்களது பேட்டிங் சரிவு மற்றும் குக்கின் பார்ம், அனைத்திற்கும் மேலாக ஸ்டீவ் ஸ்மித்தின் இன்னிங்ஸ் என்றே கூற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT