Published : 31 Aug 2023 12:15 PM
Last Updated : 31 Aug 2023 12:15 PM

SA vs AUS டி20 | மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. புத்தெழுச்சி; சங்கா எனும் நட்சத்திரம் உதயம்!

பந்தை விரட்டும் மார்ஷ்

ஆஸ்திரேலிய டி20 அணி அதன் புதிய கேப்டன் மிட்செல் மார்ஷ் மூலம் புத்தெழுச்சி கண்டுள்ளது. டர்பன் நகரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியா, அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவை 115 ரன்களுக்குச் சுருட்டி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்ததோடு மிகப்பெரிய டி20 வெற்றியையும் பெற்றது.

கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு கபில்தேவாக எழுச்சி பெற்று 49 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் விளாசி இறுதி வரை நாட்-அவுட்டாகத் திகழ, ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் புகழ் மலைமனிதன் டிம் டேவிட் 28 பந்துகளில் 64 ரன்களை மைதானம் நெடுக பறக்கவிட, பந்து வீச்சில் புதிய நட்சத்திரமாக லெக் ஸ்பின்னர் தன்வீர் சங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உதயமானார். ஸ்டாய்னிஸ் தன் பங்கிற்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இடையே இப்படி ஒருதலைபட்சமாக ஒரு ஆட்டம் இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், தென் ஆப்பிரிக்க அணி மாற்றத்தில் உள்ளது. மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் பேட்டிங்கில் தொடக்க வீரர் ரீசா ஹென்றிக்ஸ் மட்டுமே ஆஸ்திரேலிய பந்து வீச்சுத் தாக்குதலுக்கு எதிராகத் தாக்குப்பிடித்து 56 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். வான்டெர் டூசன் 21, மார்க்கோ யான்சென் 20 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டிப்பார்த்தனர். 15.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் கதை முடிந்தது.

மைதானத்துக்கு வெளியே பறந்த சிக்சர்கள்! பவர் ப்ளே சாதனைகள் நொறுங்கல்: தென் ஆப்பிரிக்கா அணியில் ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா, கேசவ் மகராஜ் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு கையொடிந்தது போலவே. லுங்கி இங்கிடி ஓவருக்கு 12 ரன்களுக்கும் மேல் விளாசப்பட்டார்.

பவுலர்கள் அனைவரும் கண்டபடி இங்கும் அங்கும் வீச பவர் ப்ளேயில் ஆஸ்திரேலியா 70 ரன்களை விளாசியது, மிட்செல் மார்ஷ், ஷார்ட் ஆகியோர் தென் ஆப்பிரிக்க வீரர்களை ஓட விட்டனர். தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 2வது பந்தையே பாயிண்டில் சிக்ஸ் விளாசினார். ஆனால், அடுத்த பந்தே அவுட் ஆனார். மிட்செல் மார்ஷ் ஒரே ஓவரில் 20 ரன்களை லுங்கி இங்கிடியை வைத்து சாத்தினார்.

மேத்யூ ஷார்ட் தன் பங்கிற்கு உயரமான இடது கை பவுலர் மார்க்கோ யான்செனை புல்வெளித் தரையைத் தாண்டி பவுண்டரிக்கு வெளியே சிக்ஸ் விளாச, மிட்செல் மார்ஷ் ராட்ஷச பவருடன் 93 மீ சிக்சரை விளாச, பந்து மைதானத்துக்கு வெளியே தெருவில் போய் விழுந்தது. பந்தைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை, காணாமல் போனது.

ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் ஷார்ட், இங்லிஸ் ஆட்டமிழந்தனர். டிம் டேவிட்டும் இறங்கி வந்தவுடன் அடித்த சிக்ஸ் மீண்டும் ஒரு தெருவில் போய் விழுந்தது. 24 பந்துகளில் அவர் அரை சதம் கண்டார். 64 ரன்களில் பவுமாவின் ஸ்டன்னிங் கேட்சில் டேவிட் ஆட்டமிழந்தார். லாங் ஆஃப் திசையில் தனது வலப்புறமாக நகர்ந்தார் பந்து அவரது தலைக்கு மேல் சென்றது. ஆனால் வலது புறம் எழும்பி பந்தை பிடித்தார் பவுமா. பந்தை கையிலேயே கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார். பிரமாதமான கேட்ச். இப்படிப்பட்ட பீல்டர்தான் பவுமா. ஆஸ்திரேலியா 226 ரன்களைக் குவித்தது.

ஸ்டாய்னிஸ், சங்கா அசத்தல்; தென் ஆப்பிரிக்கா சரிவு: ஸ்டாய்னிஸ் புதிய பந்தில் வீசினார். டர்பனில் எப்போதுமே இரவு பயங்கரமாக ஸ்விங் ஆகும். இவர் பவுமாவை பவுல்டு செய்தார். பவுமா 9 டி20 இன்னிங்ஸ்களில் அடிக்கும் 3வது டக் இது என்கிறது புள்ளி விவரம். ரீசா ஹென்றிக்ஸ் ஷாட்களை ஆட வான்டெர் டுசன் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 11 பந்துகளில் 22 ரன்கள் என்று மிட்செல் மார்ஷ் போல் அச்சுறுத்தினார். 5வது ஓவரில் ஸ்கோர் 47 ரன்களுக்கு உயர்ந்தது. ஆனால், இவர் அபாட் பந்தை நேராக மார்ஷ் கையில் அடித்து கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்ததாகத்தான் புதிய லெக் ஸ்பின்னர் தன்வீர் சங்கா உதயமானார். மார்க்ரம் 7 ரன்களில் இவரது ஷார்ட் மற்றும் வைடு பந்தை வாரிக்கொண்டு கட் ஆடினார், ஆனால் ஸ்டாய்னிஸ் கையில் பேக்வர்ட் பாயிண்டில் போய் உட்கார்ந்தது. 9வது ஓவரில்தான் சங்கா என்ற லெக் ஸ்பின்னர் வெளிப்பாடு கண்டார். அதாவது தென் ஆப்பிரிக்காவின் எதிர்கால நட்சத்திரங்கள் என்று கருதப்படும் தெவால்ட் பிரெவிஸ் (5) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்ய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்களுக்கு 69 ரன்கள் எடுத்து தடுமாறியது அந்த அணி. அதன் பிறகு எழுச்சி பெற முடியவில்லை. 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததும். சங்கா 31 ரன்களுக்கு 4 விக்கெட். ஸ்டாய்னிஸ் 18 ரன்களுக்கு 3 விக்கெட். ஆட்ட நாயகன் விருதை கேப்டன் மிட்செல் மார்ஷ் வென்றார் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x