Published : 31 Aug 2023 09:21 AM
Last Updated : 31 Aug 2023 09:21 AM
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 2-வது நாளான நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ், 75-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டொமினிக் கோஃபருடன் மோதினார். இதில் அல்கரஸ் 6-2, 3-2 என முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக டொமினிக் கோபர் விலகினார். இதனால் அல்கரஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-1, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் அட்டிலா பாலாஸையும், 6-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர் 6-3, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் யானிக் ஹான்ஃப்மேனையும், 8-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஆர்தர் காசாக்ஸையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.
12-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவெரேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிச்சையும், 13-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-2, 3-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் டிமோஃபி ஸ்கடோவையும்,
16-ம் நிலை வீரரான ஜெர்மனியின் கேமரூன் நோரி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோவையும் தோற்கடித்து 2-வது சுற்றில் கால்பதித்தனர்.
11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 2-6, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மைக்கேல் மோவிடம் தோல்வி அடைந்தார். கிரேட் பிரிட்டனின் ஆண்டி முர்ரே 6-2, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கோரெண்டின் மவுடெட்டையும், 19-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-7 (9-11), 6-7 (5-7), 6-1, 7-5, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் சுலோவேக்கியாவின் அலெக்ஸ் மால்கனையும், சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா 7-6 (7-5), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவையும் வீழ்த்தினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலினா கார்சியா, சீனாவின் வாங் யஃபானை எதிர்த்து விளையாடினார்.
இதில் கார்சியா 4-6, 1-6 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் மரினா ஜானெவ்ஸ்காவையும், 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியையும், 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபூர் 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் கமிலா ஒசோரியோவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
9-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கொரியாவின் நா லே ஹனையும், 13-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கஸட்கினா 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசியா பார்க்ஸையும், 14-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவா 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிளாரி லியுவையும், 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் அரன்ட்சா ரஸையும், 26-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அனா லினாவையும் தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்தனர். இரு முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 1-6, 1-6 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் கீரிட் மின்னெனிடம் தோல்வி அடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT