Published : 31 Aug 2023 10:32 AM
Last Updated : 31 Aug 2023 10:32 AM
முல்தான்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தானின் முல்தான் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. 6 ஓவர்களில் 25 ரன்களை சேர்ப்பதற்குள் 2 விக்கெட்களை பறிகொடுத்தது. பஹர் ஸமான் 14, இமாம் உல்ஹக் 5 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அஸமுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். ரிஸ்வான் 50 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய அஹா சல்மான் 5 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இப்திகார் அகமது அதிரடியாக விளையாடினார். நிதானமாக பேட் செய்த பாபர் அஸம் 109 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் தனது 19-வது சதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக விளையாடி வந்த அவர், 131 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்த நிலையில் சோம்பால் கமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனது முதல் சதத்தை விளாசிய இப்திகார் அமகது 71 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 343 ரன்கள் இலக்குடன் நேபாளம் அணி பேட்டிங்கை தொடங்கியது.
23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 104 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோல்வியை தழுவியது நேபாளம். பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT