Published : 06 Jul 2014 03:00 PM
Last Updated : 06 Jul 2014 03:00 PM
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் கோஸ்டா ரிகா அணியை நெதர்லாந்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
பெனால்டி ஷூட் அவுட்டில் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்தின் பதிலி (sub) கோல்கீப்பர் டிம் க்ருல், கோஸ்டா ரிகா வீரர்களான பிரையன் ருயிஸ் மற்றும் மிச்செல் உமனா ஆகியோர் அடித்த ஷாட்களை அபாரமாகத் தடுக்க நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரேசில் நட்சதிரம் ரொனால்டோவே வியக்கும் அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் விளையாடிய கோஸ்டார் ரிகா, பெனால்டி ஷூட் அவுட்டில் பரிதாப வெளியேற்றம் கண்டது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
கோஸ்டா ரிகா அணி அதன் முதல் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களை எங்கோ தொலைத்து விட்டது போல் விளையாடியது. கிரீஸ் அணியுடன் பெனால்டி ஷூட் அவுட்டில் வென்றது போல் நெதர்லாந்தையும் வென்று விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டது. தங்களது கோல் கீப்பர் கெய்லர் நவாஸை நம்பி ஆட்டத்தை ஆடியது.
நெதர்லாந்தின் ராபின் வான் பெர்சி, அர்ஜென் ரூபென், வெஸ்லி ஸ்னெய்டர், டர்க் குயிட் ஆகியோர் தங்கள் கோல் கிக்கை கோலாக மாற்ற கடைசியில் கோஸ்டா ரிகா வீரர் உமனா அடித்த் ஷாட்டை நெதர்லாந்து கோல்கீப்பர் பாய்ந்து தடுத்தார்.
120 நிமிட நேர ஆட்டத்தில் கோல்கள் எதுவும் விழவில்லை என்று கூறுவதைவிட நெதர்லாந்தின் 3 கோல் முயற்சிகளை கோஸ்டா ரிகாவின் கோல்கீப்பர் நவாஸ் முறியடித்தார் என்பதே சரியாக இருக்கும்.
முதல் வாய்ப்பு: நெதர்லாந்தின் குயிட் பக்கவாட்டாக மெம்பிஸ் டீபேயிற்கு அடித்தார். பந்து, வான் பெர்சியிடம் வர, அவர் கோல் நோக்கி அடித்த ஷாட்டை நவாஸ் தடுத்தார்.
2வது வாய்ப்பு: கோஸ்டா ரிகா கேப்டன் பந்தின் கட்டுப்பாட்டை டீபேயிடம் இழக்க, ரூயிஸ் பந்தை எடுத்து வந்து செய்த கோல் முயற்சியை முறியடித்தார் நவாஸ்.
3வது வாய்ப்பு: அர்ஜென் ரூபென் மீது கோஸ்டா ரிகா ஃபவுல் செய்ய ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. இதில் 2 ஃப்ரீ கிக் கிடைத்தது, 2வது ஃப்ரீகிக்கை நெதர்லாந்தின் ஸ்னெய்டர் வீரர்கள் சுவரைத் தாண்டி தூக்கி அடிக்க பந்து சுழன்றபடியே கோல் நோக்கி சென்றது. அப்போது நவாஸ் பறந்து ஒரு கையால் அதனைத் தடுத்தார்.
மற்றுமொரு முறை அர்ஜென் ரூபென் கொண்டு வந்த பந்தை கோல் அடிக்கும் முன் நவாஸ் முன்னேறி வந்து தடுத்தார்.
முதல் பாதியில் 63% நெதர்லாந்திடம் பந்து இருந்தும் கோல் அடிக்க முடியவில்லை. கோஸ்டா ரிக்காவுக்கு கோல் நோக்கி அடிக்கும் வாய்ப்பு குறைவாகவே அமைந்தது. ஒரு முறை ஜூனியர் டயஸ் பந்தை எடுத்துச் சென்றார் பந்து கேம்பெலிடம் வருகிறது, அவர் மீது அங்கு ஃபவுல் செய்யப்படுகிறது. கோஸ்டா ரிகாவின் பெனால்டி முறையீடு நடுவரால் நிராகரிக்கப்பட்டது.
ஆட்டம் முடிய 2 நிமிடங்கள் இருந்தபோது ஸ்னெய்டர் அபாரமாக ஒரு பந்தை வான் பெர்சிக்கு அடிக்க அவர் மிக துல்லியமாக கோலை நோக்கி அடித்த ஷாட்டை மீண்டும் நவாஸ் சுவராக நின்று தடுத்தார்.
மேலும் ஒரு முறை வான் பெர்சி இடது பந்தை கோல் நோக்கி அடிக்க முயன்று பந்தை கோட்டை விட்டார். பிறகு, காய நேரத்தில் நெதர்லாந்து வீரர் டேலி பிளைன்ட் ஒரு கிராஸ் செய்ய பல கால்களைத் தாண்டி வான் பெர்சிக்கு பந்து வர, அவர் கோல் அடிக்கத் தவறி கோல் போஸ்டில் அடித்தார்.
கூடுதல் நேரத்தில் நெதர்லாந்து ஒரு பந்தை விறுவிறுவென எடுத்து வர ரான் விளார் பந்தை தலையால் கோல் நோக்கி அடித்தார். மீண்டும் கோஸ்டா ரிகா கோல் கீப்பர் நவாஸ் அதன் திசையை மாற்றி விட்டார்.
ஆட்டம் பெனால்டி கிக் நோக்கி முன்னேறி கொண்டிருந்தபோது கடைசி நேரத்தில் கோஸ்டா ரிகா அபாரமாக பந்தை வெட்டி எடுத்துச் சென்றது. உரீனா அபாரமான முறையில் அந்த மூவை நிகழ்த்தினார், ஆனால் அவர் அடித்த் ஷாட்டை இம்முறை நெதர்லாந்து கோல் கீப்பர் ஜேன் சிலீசன் தடுத்தார். ஆகக் கடைசியில் ஸ்னெய்டரின் கோல் முயற்சி போஸ்ட்டில் பட்டு வீண் ஆனது.
பெனால்டி ஷூட் அவுட்டிற்கு முன்னர் நெதர்லாந்து மேலாளர் புத்திசாலித்தனமான ஒரு முடிவை எடுத்தார். சிலீசனை கோல் கீப்பர் பொறுப்பிலிருந்து விலக்கி வைத்து, க்ருல் என்பவரை நியமித்தார்.
இதன் பலனாக அவர் ருய்ஸ் அடித்த கோஸ்டா ரிகாவின் 2வது பெனால்டி கிக்கை சேவ் செய்தார். பிறகு உமனாவின் ஷாட்டை கையால் தட்டி விட்டார். நெதர்லாந்து - அர்ஜென்டீனா அரையிறுதியில் சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT