Published : 30 Aug 2023 06:48 PM
Last Updated : 30 Aug 2023 06:48 PM

“நீங்க எவ்வளவுதான் ஐபிஎல் ஆடியிருந்தாலும் பாகிஸ்தானிடம் பாச்சா பலிக்காது” - சல்மான் பட் சீண்டல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கி விட்டது. பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் முல்டானில் முதல் போட்டியில் ஆடிவருகின்றனர். பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகின்றது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் 2-ம் தேதி மோதுகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் ஐபிஎல் அனுபவம் அனுபவமே அல்ல; பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவதென்பது வேறு கதை என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும் தொடக்க வீரருமான சல்மான் பட்.

செப்டம்பர் 17-ம் தேதி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஆனால் பங்களாதேஷ், இலங்கை அணிகளும் உள்ளன. இடையில் சூப்பர் 4 சுற்றிலும் இரு அணிகளும் மோதுவதை ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஏ-யில் உள்ளனர். இந்நிலையில் சல்மான் பட் கூறும்போது ரோஹித் சர்மா, விராட் கோலியை நம்பியே இந்திய அணி இருக்கிறது. மற்றவர்கள் என்னதான் ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருந்தாலும் அந்த அனுபவம் பாகிஸ்தானிடம் பலிக்காது என்று கூறியுள்ளார்.

யூ டியூப் சேனல் ஒன்றில் சல்மான் பட் கூறியதாவது: “ரோஹித் சர்மா நன்றாக ஆடும்போதோ அல்லது விராட் கோலி பிரமிக்கத்தக்க வகையில் ஏதாவது செய்யும் போதோ இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் விரைவில் அவுட் ஆகி மற்றவர்கள் மீது பொறுப்பு விழும்போது மற்றவர்கள் சரியாக ஆடாததையே இந்திய அணியைப் பொறுத்தவரை நாம் பார்த்து வருகிறோம். பாகிஸ்தானில் பாபர் அசாம், ரிஸ்வான், ஷதாப் கான், ஃபகர் ஜமான், ஷாஹின், ஹாரிஸ் ராவுஃப் என்று வரிசையாக மேட்ச் வின்னர்கள் உள்ளனர். இந்திய அணியிலும் ஜடேஜா, பும்ரா, ஷமி, ரோஹித் சர்மா, விராட் கோலி என்று மேட்ச் வின்னர்கள் உள்ளனர்.

ஆகவே பாகிஸ்தான் 2 பெரிய விக்கெட்டுகளை முதலில் எடுத்து விட்டால் மற்றவர்கள் பெரிய அளவில் நிரூபிக்க வேண்டி வரும். மற்ற வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டிகளை வெல்ல வைத்ததில்லை. மேலும் பாகிஸ்தானில் மணிக்கு 90 மைல்கள் வீசும் இரண்டு பவுலர்களாவது இருக்கின்றனர். இரு வகை ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆகியோரும் உள்ளனர்.

இந்திய அணியிடம் அங்கு எதிர்பார்ப்பு இருப்பதால் அழுத்தம் அந்த அணிக்கு அதிகம். எந்தக் காரணங்களுக்காகவோ இந்திய அணி பாகிஸ்தானுடன் அதிகம் ஆடுவதில்லை; சமீபமாக ஆடவில்லை. ஆகவே அவர்கள் என்னதான் ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் அனுபவமற்ற்வர்களே. அதுவும் உயர் அழுத்தப் போட்டிகளில் ஆட ஐபிஎல் அனுபவம் போதாது. இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மன அழுத்தத்தை ஐபிஎல் போட்டிகள் ஒருபோதும் தராது” என்று கூறுகிறார் சல்மான் பட்.

சல்மான் பட் சொல்வது சரியா தவறா என்பது செப்டம்பர் 2-ம் தேதி சனிக்கிழமையன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போது தெரிந்து விடும். பும்ராவின் வரவு உண்மையில் பெரிய பூஸ்டர். ஆனால் பாபர் அசாம், ரிஸ்வான், ஃபகர் ஜமான், இப்திகார் நல்ல பார்மில் இருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x