Published : 30 Aug 2023 08:16 AM
Last Updated : 30 Aug 2023 08:16 AM
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 84-ம்நிலை வீரரான பிரான்ஸின் அலெக்சாண்ட்ரே முல்லருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-0, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் ஏடிபி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவதை உறுதி செய்தார் ஜோகோவிச்.
5-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு 7-6 (7-5), 3-6, 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எமிலியோ நவாவையும், 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ 6-2, 7-5, 6-1 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த லேனர் டியனையும், 81-ம் நிலை வீரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கையும் வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தனர். 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன், 63-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ கார்பால்ஸை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹோல்கர் ரூன் 3-6, 6-4, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
7-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் -2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கையும், 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் ஜான்சனையும் வீழ்த்தினர். 15-ம் நிலை வீரரான கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் 3 மணி நேரம் 27 நிமிடங்கள் போராடி 6-7 (5-7), 6-4, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கென்சி மெக்டொனால்டிடம் வீழ்ந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற நேர் செட்டில் சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சனை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். 4-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கையும், 11-ம்நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரோ விட்டோவா 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்ஸாவையும் தோற்கடித்தனர்.
18-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரன்கா 6-1, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்ஸின் பியோனா ஃபெரோவையும்,10-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா முச்சோவா 6-4, 6-0 ஆஸ்திரேலியாவின் ஸ்டிரோம் சாண்டர்ஸையும் வீழ்த்தி 2-வதுசுற்றுக்கு முன்னேறினர். 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 2 மணிநேரம் 52 நிமிடங்கள் போராடி 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா சீக்மண்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 8-ம் நிலை வீராங்கனையான கிரீஸின் மரியா சக்காரி 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் 71-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் ரெபேகா மசரோவாவிடம் தோல்வி அடைந்தார்.
3 வருடங்களுக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் தொடரில் களமிறங்கிய டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 6-2 என்ற நேர் செட்டில் தகுதி நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தாத்யானா புரோசோரோவாவை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். குடும்ப வாழ்க்கையை தொடங்கும்விதமாக கடந்த 2020-ம் ஆஸ்திரேலிய ஓபன் தொடருன் வோஸ்னியாக்கி டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அவர், மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு திரும்பி இருந்தார். முன்னாள் முதல் நிலை வீராங்கனையான அவர், தற்போது கிராண்ட் ஸ்லாம் தொடரை வெற்றிகரமாக தொடங்கி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT