Published : 30 Aug 2023 08:35 AM
Last Updated : 30 Aug 2023 08:35 AM

உலக பாட்மிண்டன் தரவரிசை: ஹெச்.எஸ்.பிரனோய் 6-வது இடத்துக்கு முன்னேற்றம்

ஹெச்.எஸ்.பிரனோய்

புதுடெல்லி: உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திரங்களான ஹெச்.எஸ்.பிரனோய் 6-வது இடத்துக்கும் பி.வி.சிந்து 14-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.

உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் 3 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் உயர் இடத்தை பிரனோய் எட்டுவது இதுவே முதல் முறையாகும். கேரளாவைச் சேர்ந்த 31 வயதான பிரனோய், சமீபத்தில் முடிவடைந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதனால் தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். அவர், தற்போது 72,437 புள்ளிகளுடன் உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தொடர்ச்சியாக இருந்து வரும் ஒரே இந்திய வீரர் பிரனோய் மட்டுமே. இந்த காலக்கட்டத்தில் அவர், மலேசிய மாஸ்டர்ஸ் தொடரில் பட்டம் வென்றிருந்தார். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தார்.

மற்ற இந்திய வீரர்களில் லக் ஷயா சென் ஓர் இடம் பின்தங்கி 12-வது இடத்தில் உள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்றுடன் வெளியேறிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 20-வது இடத்தில் தொடர்கிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து ஓர் இடம் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடத்தை தக்கவைத்துள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி ஜோடி இரு இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x