Published : 30 Apr 2014 10:00 AM
Last Updated : 30 Apr 2014 10:00 AM
சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப்-ஆர்பிஐ (இந்திய ரிசர்வ் வங்கி) அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
இந்த முறை சாம்பியனாகும் அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட ஐசிஎப்பின் ஆட்டம் மிக மோசமாக அமைந்தது. அதேநேரத்தில் சென்னை லீக்கின் தொடக்கத்தில் தடுமாறிய ஆர்பிஐ அணி, இப்போது நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதோடு, ஐசிஎப்புக்கு எதிராக அசத்தலாகவும் ஆடியது.
சென்னை நேரு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐசிஎப் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதன் ஆட்டம் ஏமாற்றமளிப்பதாய் அமைந்தது. ஆர்பிஐ அணியின் முன்களம் பலவீனமாக இருந்த நிலையில், புதிய ஸ்டிரைக்கர் உலோச்சா ஆஸ்டினின் வருகை அந்த அணிக்கு பலம் சேர்த்துள்ளது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆர்பிஐ மிட்பீல்டர் ஆன்டனியின் அற்புதமான ஷாட்டை கோல் கீப்பர் சதீஷ்குமார் அற்புதமாக முறியடிக்க, கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது ஐசிஎப். இதன்பிறகு ஐசிஎப் அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை லெப்ட் விங்கர் கார்த்திக், ஸ்டிரைக்கர் ஜெயக்குமார் இருவரும் சேர்ந்து வீணடித்தனர். தொடர்ந்து வேகம் காட்டிய ஆர்பிஐ அணியில் ஸ்டிரைக்கர் ஆஸ்டினின் கோல்
வாய்ப்பை சதீஷ்குமார் தகர்க்க, பின்னர் ஐசிஎப்புக்கு கிடைத்த கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார் மற்றொரு ஸ்டிரைக்கரான பிரெட்டி. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் ஆர்பிஐ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, ஐசிஎப் ஸ்டிரைக்கர் பிரெட்டி சொதப்பலின் உச்சத்துக்கே சென்றார். அவர் கோலடிக்க முயற்சிக்காததோடு, தனது அணியின் மற்ற வீரர்கள் ஆர்பிஐ வீரர்களோடு போராடியபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ஐசிஎப் மத்திய பின்கள வீரர் விமல் குமார், ஆர்பிஐ ஸ்டிரைக்கர் ஆஸ்டினை கீழே தள்ள, அவருக்கு 2-வது ‘யெல்லோ கார்டு’ அதாவது ‘ரெட் கார்டு’ காண்பித்தார் நடுவர்.
இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பிறகு ஐசிஎப் அணிக்கு ரைட் விங்கர் நிர்மல் குமார் ஒரு சில கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவையனைத்தையும் பிரெட்டி வீணடித்தார். இறுதியில் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. ஆர்பிஐ ஸ்டிரைக்கர் ஆஸ்டின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் டிவிசன் லீக் போட்டியில் சென்னை எப்.சி. 2-1 என்ற கோல் கணக்கில் நேதாஜி அணியைத் தோற்கடித்தது.
ஆர்பிஐயின் முன்னேற்றம்
முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் எப்சிஐயை வென்ற ஆர்பிஐ, பின்னர் ஏரோஸுடன் 0-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இதன்பிறகு ரயில்வேயுடன் 1-1 என்ற கணக்கிலும், இந்தியன் வங்கி, ஐசிஎப் அணிகளுடன் கோலின்றியும் டிரா செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT