Published : 29 Dec 2017 07:37 PM
Last Updated : 29 Dec 2017 07:37 PM
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று பாதி நாள் ஆட்டத்தை மழை ஆட்கொள்ள வெற்றி வாய்ப்புக்காக இங்கிலாந்து போராடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் பின் தங்கிய நிலையில் மழைக்கு முன்னதாக 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 140 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தும், கேப்டன் ஸ்மித் 67 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தும் களத்தில் இங்கிலாந்தை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக இங்கிலாந்து இன்று தொடங்கிய போது முதல் பந்திலேயே ஜேம்ஸ் ஆண்டர்சன் அவுட் ஆனார். கமின்ஸ் ரவுண்ட் த விக்கெட்டில் ஆண்டர்சன் உடலை குறிவைத்து பந்தை வீச ஆண்டர்சன் அதை ஷார்ட் லெக் பீல்டர் கையில் கொடுத்து வெளியேற 491 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. ஆஸி. தரப்பில் கமின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடக்கத்தில் இறங்கி இறுதி வரை நாட் அவுட்: அதிகபட்ச ஸ்கோர் எடுத்து குக் சாதனை:
அலிஸ்டர் குக் 244 ரன்கள் எடுத்து தொடக்கத்தில் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்கமால் இன்னொரு சாதனைக்குச் சொந்தக்காரரானார். மைக்கேல் ஆர்தர்டன் நியூஸிலாந்துக்கு எதிராக தொடக்கத்தில் இறங்கி 94 நாட் அவுட் என்று கேரி செய்தார், அதன் பிறகு தற்போது அலிஸ்டர் குக் 244 நாட் அவுட், கேரி செய்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்கத்தில் இறங்கி அணி ஆல் அவுட் ஆகியும் நாட் அவுட்டாக இருந்த வகையில் 244 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்த தொடக்க வீரரானார் அலிஸ்டர் குக்.
409 பந்துகள் 27 பவுண்டரிகள், 634 நிமிடங்கள் 244 நாட் அவுட் என்ற விவரம் அலிஸ்டர் குக் கிரிக்கெட் டைரியில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சாதனை. நியூஸிலாந்தின் தொடக்க வீரர் கிளென் டர்னர் 1972-ல் கிங்ஸ்டனில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 223 நாட் அவுட்தான் இதுவரை அதிகபட்ச கேரி த்ரூ இன்னிங்ஸாக இருந்தது. குக் இப்போது அந்தச் சாதனையையும் முறியடித்துவிட்டார்.
உணவு இடைவேளைக்கு முன்னரே இங்கிலாந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தோல்வி அச்சுறுத்தல் அளித்தது, ஆனால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ட்ராவை மனதில் கொண்டு கடும் நிதானத்துடன் ஆடினர். மழையால் இன்றைய தினத்தில் 44 ஓவர்களே சாத்தியமாக ஆஸ்திரேலியா பாதுகாப்பாக 103/2 என்று உள்ளது.
வார்னரும் பேங்கிராப்டும் 51 ரன்கள் தொடக்கம் கண்டனர். மிட் ஆனில் அருமையான பவுண்டரி அடித்த பேங்கிராப்ட் அதன் பிறகு கிறிஸ் வோக்ஸ் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். உஸ்மான் கவாஜா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 11 ரன்கள் எடுத்திருந்த போது ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 65/2 என்ற நிலையிலிருந்து வார்னரும், ஸ்மித்தும் கடும் பொறுமையுடன் டிராவை மனதில் கொண்டு ஆடி மழை வரை விக்கெட் விழாமல் எடுத்துச் சென்றனர். ஆஸ்திரேலியா 103/2.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT