Published : 22 Dec 2017 02:57 PM
Last Updated : 22 Dec 2017 02:57 PM
விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலகில் எங்கு வேண்டுமானாலும் நன்றாக ஆடி விரும்பத்தக்க முடிவுகளை அடைய வைக்கும் திறமை கொண்டது என்று இந்திய முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் தெரிவித்தார்.
1971-ல் இங்கிலாந்து, மே.இ.தீவுகள் என இரட்டைத் தொடரை அவர்கள் மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் அஜித் வடேகர்.
டாக்டர் ராமேஷ்வர் தயாள் வாழ்நாள் சாதனையாளர் விருது வடேகருக்கு மும்பையில் வழங்கப்பட்டது. அமோல் மஜூம்தார், ரத்னாகர் ஷெட்டி, பிரவீண் ஆம்ரே ஆகியோரும் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அஜித் வடேகர் கூறியதாவது:
விராட் கோலி முற்றிலும் வித்தியாசமான ஒரு வார்ப்பில் உருவானவர். அருமையான, ஆக்ரோஷமான வீரர். இன்றைய கிரிக்கெட் உலகில் ரசிகர்களை மைதானத்துக்கு வரவைப்பதில் விராட் கோலி போன்ற ஒரு கிரிக்கெட் வீரர் தேவை.
அவர் ஆக்ரோஷமாக ஆடுவதோடு, அணிக்காகவும் ஆடுகிறார், அவரிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம் எப்போதும், வெற்றிபெறவே ஆடுகிறார். போட்டிகளில் தோல்வி அடைவதை அவர் விரும்புவதில்லை. இது ஒரு மிகப்பெரிய விஷயமாகும்.
அஜிங்கிய ரஹானே குறித்து...
சுனில் கவாஸ்கருக்குக் கூட ரன்கள் எடுக்க முடியாத காலக்கட்டங்கள் இருந்துள்ளன. எந்த ஒரு கிரேட் கிரிக்கெட்டருக்கும் இந்த நிலை ஏற்படும். இந்தியா உற்பத்தி செய்த டாப் கிரிக்கெட் வீரர்களில் ரஹானேவும் ஒருவர், எனவே இந்த மோசமான பார்மிலிருந்து அவர் நிச்சயம் மீண்டெழுவார். ஆனால் அவர் எவ்வளவு விரைவில் பார்முக்கு வருகிறாரோ அது இந்திய அணிக்கு மிக்க நல்லது.
அவர் தொடர்ந்து விளையாட வேண்டும், அப்படி ஆடினால் இழந்த தன்னம்பிக்கையை அவர் மீண்டும் பெறுவார்.
ரோஹித் 208 ரன்கள் குறித்து...
பிட்ச்கள் இப்போதெல்லாம் நன்றாக உள்ளன. பந்து வீச்சு ஒரேமாதிரியாக இருக்கிறது. எனவே ரன்கள் அடிப்பது பேட்ஸ்மென்களுக்கு சுலபமாக இருக்கிறது. ஆனாலும் சமகால வீரர்கள் திறமையானவர்கள், இவர்கள் அதிக ஷாட்களை ஆடுகின்றனர். விராட் கோலியுடன் ரோஹித்தும் அபாயகரமான ஒரு வீரரே
தென் ஆப்பிரிக்கா எப்போதும் வீழ்த்துவதற்குக் கடினமான அணி. பிட்ச்களில் வேகம் அதிகமிருக்கும். என்வே இந்திய வீரர்கள் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது இந்திய அணி நன்றாக ஆடி வருகிறது. சமநிலையும் உள்ளது, எனவே இந்த அணி தென் ஆப்பிரிக்காவில் நன்றாக ஆடுவதற்கான போதிய அனுபவம் பெற்றுள்ளது என்றே கூற வேண்டும். எனவே எங்கு சென்றாலும் நன்றாகவே ஆட வேண்டும்.
இவ்வாறு கூறினார் அஜித் வடேகர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT