Published : 26 Aug 2023 09:25 AM
Last Updated : 26 Aug 2023 09:25 AM

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா - டிபி மனு, கிஷோர் ஜெனாவும் அசத்தல்

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதிசுற்றில் 88.77 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். 83 மீட்டர் தூரம் எறிந்தாலே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்பதால் தனது முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் எறிந்து நேரடியாக இறுதி சுற்றில் நுழைந்தார் நீரஜ் சோப்ரா. தனது அடுத்த வாய்ப்புகளை நீரஜ் சோப்ரா பயன்படுத்தவில்லை.

உலக தடகள சாம்பியன்ஷிப் தகுதி சுற்றில் அசத்திய நீரஜ் சோப்ரா, 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இலக்கு 85.50 மீட்டர் ஆகும். இதைவிட நீரஜ் சோப்ரா அதிக தூரம் எறிந்து அனைவரது பார்வையையும் தனது பக்கம் ஈர்த்தார்.

மற்றொரு இந்திய வீரரான டிபி மனு தகுதி சுற்றில் 81.31 மீட்டர் தூரம் எறிந்து ‘ஏ’ பிரிவில் 3-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதி சுற்றின் ‘பி’ பிரிவில் மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜெனா 80.55 மீட்டர் தூரம் எறிந்து 5-வது இடம் பிடித்து இறுதி சுற்றில் நுழைந்தார். இந்த பிரிவில் பாகிஸ்தானின் நதீம் அர்ஷத் 86.79 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதி சுற்றில் கால்பதித்தார்.

நடப்பு சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 78.49 மீட்டர் தூரம் எறிந்து ‘ஏ’ பிரிவில் 7-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். நீரஜ் சோப்ராவுக்கு சவால் அளிப்பவராக கருதப்படும் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 82.39 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றில் நுழைந்தார்.

ஜெஸ்வின் ஆல்ட்ரின் ஏமாற்றம்: ஆடவருக்கான நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.77 மீட்டர் நீளம் தாண்டி 11-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். முதல் 2 வாய்ப்புகளையும் ஃபவுல் செய்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். இதனால் 12 பேர் கலந்து கொண்ட இறுதிப் போட்டியில் அவரால் 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x