Published : 08 Dec 2017 10:42 AM
Last Updated : 08 Dec 2017 10:42 AM
இ
ந்திய மண்ணில் அதிலும் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கும் மேலாக எதிர்கொண்டு டெல்லி பெரோஷா கோட்லா டெஸ்ட் போட்டியை கடைசி நாளின் இறுதி மணித்துளிகள் வரை கொண்டு சென்று டிரா செய்து வியக்க வைத்துள்ளது இலங்கை அணி. பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட இலங்கை, இந்திய மண்ணில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை (295) குவித்தும் சாதனை படைத்துள்ளது.
இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை காற்று மாசுபாட்டின் ஊடாகவே சந்தித்திருந்தது. காற்று மாசால் சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர். ஒட்டுமொத்த அணியும் முகமூடி அணிந்து விளையாடிய போது வீரர்களின் உண்மைத்தன்மை குறித்து சில அதிகாரிகளும், முன்னாள் இந்திய வீரர்களும் கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து ஒவ்வொருவரும் கருத்துக்களை அள்ளித் தெளித்த போது அது வார்த்தை போராக பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் விளையாடிய வீரர்கள் தங்களது கடமையை தியாகம் செய்யாதிருப்பதை தவிர வேறு வழி காணப்படவில்லை.
ஒருவகையில் இது பெருமை அளிக்கக்கூடியதுதான். ஆட்டத்தின் இறுதி பகுதி ஒரு கட்டத்தில் யுத்தமாக பார்க்கப்பட்டாலும் கடும் சவால் அளித்த இலங்கை, இறுதி மணித்துளிகளிலேயே டிராவில் முடிக்க சம்மதம் தெரிவித்தது. 4-வது நாள் ஆட்டத்தில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி நாளில் 87 ஓவர்களை சந்தித்து இந்திய பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்துள்ளனர் இலங்கை பேட்ஸ்மேன்கள். இதில் 26 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தனஞ்ஜெயா டி சில்வாவின் பங்குதான் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. காற்று மாசுபாடு காரணமாக 2-வது நாள் ஆட்டத்தின் போது ஓய்வறையில் வாந்தி எடுத்த தனஞ்ஜெயா 2-வது இன்னிங்ஸில் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வீசினார்.
ஆனால் 410 ரன்கள் இலக்கை விரட்டியபோது பேட்ஸ்மேனாக களத்தில் 257 நிமிடங்களை செலவிட்டு 119 ரன்கள் சேர்த்ததுடன் இந்திய அணியின் வெற்றிக்கு தடைக்கல்லாக மாறினார். 219 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என மட்டையை சுழற்றிய நிலையில் தசைப்பிடிப்பால் குனிந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் களத்தில் இருந்து அவர் வெளியேறினார். இப்படி ஒரு சூழ்நிலையில் இன்றைய காலக்கட்டத்தில் ரன்னர்ஸ் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அமைதியான, உறுதியான தாக்குதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை கலந்த வகையில் தனஞ்ஜெயாவின் இன்னிங்ஸ் இருந்தது.
அதேவேளையில் இதனை ஒரு காவியமான இன்னிங்ஸ் என்றும், தோல்வியில் இருந்து ஆட்டத்தை மீட்டெடுக்கும் வகையிலான பேட்டிங் எனவும் வர்ணிக்கலாகாது. மாறாக தனிப்பட்ட பேட்ஸ்மேனின் முயற்சியாகவே கருதவேண்டி உள்ளது. அதிலும் ரன்கள் சேர்த்தால் அழுத்தத்தை குறைக்கலாம் என்ற மனோபாவம் கொண்ட வீரரின் நிலையில் இருந்து. ஆடுகளமும் அவருக்கு கைகொடுத்தது. மாறாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எந்த உதவியும் ஆடுகளத்தில் இருந்து கிடைக்கவில்லை. அதேவேளையில் பந்துகளை திரும்ப விட்டு அதன் போக்கிலேயே சென்று எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார் தனஞ்ஜெயா. இந்த யுத்திதான் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது இரு முனை தாக்குதல்களையும், நவீன காலத்துக்கு தகுந்தபடி உத்வேகம் பெற்றுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சையும் எந்தவித அச்சுறுத்தலும், அலட்டலும் இல்லாமல் எதிர்கொண்டார் தனஞ்ஜெயா. ஒவ்வொரு பந்திலும் ரன் சேர்க்க முயன்றார். அது முடியாத வேளையில் தடுப்பாட்டத்தில் ஈடுபடவும் அவர் தவறவில்லை. முக்கியமாக பொறுமையாக காத்திருந்து தேவையான நேரங்களிலேயே பந்துகளை விரட்டினார். முழுநீளத்தில் வீசப்பட்ட பந்துகளை பிளாக் செய்தும், குறுகிய நீளத்தில் வந்த பந்துகளில் சிங்கிள் ரன்களையும் சேர்த்தார்.
தனஞ்ஜெயாவின் நேர்த்தியான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் அஸ்வின், கவர் திசையிலும், டீப் பாயின்ட் திசையிலும் பீல்டரை நிறுத்தி புதிய வியூகம் அமைத்தார். ஆனால் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனஞ்ஜெயா, ஸ்வீப் ஷாட்களை கையாண்டு இந்திய வீரர்களுக்கு டுவிஸ்ட் வைத்தார். ஆட்டத்தின் நடு செஷனில் நெருக்கமான பீல்டிங் தளர்த்தப்பட ஒவ்வொரு ஓவரிலும் இருமடங்காக ரன்களை சேர்த்தார். சந்திமாலுடன் இணைந்து 112 ரன்களும், ரோஷன் சில்வாவுடன் இணைந்து 58 ரன்களும் சேர்த்து இந்திய அணியை வெற்றிப் பாதையில் இருந்து திசை திருப்பினார் தனஞ்ஜெயா.
இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிப் பாதையை கடக்க வேண்டும் என்றால் முதலில் தனஞ்ஜெயாவை வீழ்த்தியாக வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை உருவானதாகவே கருதப்படுகிறது. காயம் காரணமாக அவர் வெளியேறிய போதிலும் அறிமுக வீரரான ரோஷன் சில்வா 154 பந்துகளை சந்தித்து 74 ரன்கள் சேர்த்ததுடன் வியக்கத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-வது இன்னிங்ஸில் இந்திய மண்ணில் வெளிநாட்டு வீரர்களில் அதிக ரன்களை பதிவு செய்த தனஞ்ஜெயா மற்றும் 29 வயதான ரோஷன் சில்வாவின் ஆட்டம் இலங்கை அணி நிர்வாகத்துக்கு சிறந்த பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.
தனஞ்ஜெயா இதுவரை 11 டெஸ்ட்டில் விளையாடி 3 சதங்கள், 2 அரை சதங்களுடன் 846 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் அதற்குள் அவர் பலமுறை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு உள்நாட்டு சீசனில் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் இலங்கை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. இந்தத் தொடரில் தனஞ்ஜெயாதான் டாப் ஸ்கோரராக (365) திகழ்ந்தார். ஆனால் இதையடுத்து நடைபெற்ற தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் வெறும் 125 ரன்களே சேர்க்க, அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உள்ளூரில் நடைபெற்ற தொடரில் தனஞ்ஜெயா சேர்க்கப்படவில்லை. இத்தனைக்கும் அந்த அணிக்கு எதிராக அவர் 2 ஆட்டங்களில் 225 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஒருவழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 2-வது டெஸ்ட்டில் தனஞ்ஜெயாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டும், 2-வது இன்னிங்ஸில் 17 ரன்களும் சேர்க்க அடுத்த ஆட்டத்தில் வாய்ப்பு பறிபோனது. தற்போது இந்திய சுற்றுப்பயணத்தில் முதல் இரு ஆட்டங்களிலும் தனஞ்ஜெயாவுக்கு இடம் கிடைக்கவில்லை. டெல்லி ஆட்டத்தில் மட்டுமே களமிறக்கப்பட்டார். வழக்கமாக 6-வது வீரராக களமிறங்கும் அவர், இம்முறை 3-வது வீரராக களமிறக்கப்பட்டார். இது அவர், தன்னை களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. அவர் விளையாடிய விதம் இலங்கை அணிக்கு கிடைத்துள்ள புதிய வியடிலாகவே கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT