Published : 21 Jul 2014 06:35 PM
Last Updated : 21 Jul 2014 06:35 PM

ஆந்திரா கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகிறார் மொகமட் கயீஃப்

உத்திரப்பிரதேசத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மொகமட் கயீஃப் ஆந்திரா அணியின் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் ரஞ்சி கிரிக்கெட் சீசனில் அவர் ஆந்திர அணியின் கேப்டனாக செயலாற்றவுள்ளார். இதற்காக அவருடன் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது ஆந்திர கிரிக்கெட் சங்கம்.

அலகாபாத்தை சொந்த ஊராகக் கொண்ட மொகமட் கயீஃப், முதல் தர கிரிக்கெட்டில் 9,277 ரன்களை எடுத்ததோடு, 143 கேட்ச்களையும், 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். உத்திரப்பிரதேச அணியை இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசக்கூடிய அணியாக மாற்றியவர் கயீஃப் என்றால் மிகையாகாது.

இவரது கேப்டன்சியில் அந்த அணி ரஞ்சி சாம்பியனானது. இருமுறை அரையிறுதி வரை வந்தத

“உத்திரப்பிரதேசத்தில் எனது கிரிக்கெட் முடிந்து விட்டது. இனி ஆந்திராதான். சுரேஷ் ரெய்னா, பிரவீண் குமார், பியூஷ் சாவ்லா ஆகியோரை வளர்த்தெடுத்து சர்வதேச கிரிக்கெட்டிற்குத் தயார் படுத்தியதில் உத்திரப்பிரதேச கிரிக்கெட் சங்கத்திற்கு நிறைய பங்கு உள்ளது.

இனி ஆந்திராவிலிருந்து சர்வதேச கிரிக்கெட் தரத்திற்கான வீரர்களை உருவாக்குவதே எனது பணி” என்றார் கயீஃப்.

அபாரமான ஃபீல்டரான மொகமட் கயீஃபின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வு அநியாயமாக 13 டெஸ்ட்களுடன் முடிவுக்கு வந்தது. 125 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடினார்.

இவர் ஒரு வலுவான கேப்டனாவார். அணியை வழிநடத்துவதில், வீரர்களை உருவாக்குவதில், கிரிக்கெட் கள உத்திகளில் இவரது தலைமை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹிற்கு இணையாகப் பேசப்பட்டது.

கங்குலிக்குப் பிறகு கும்ப்ளே கேப்டன்சி பொறுப்பிற்கு வந்தார். பிறகு தோனி வந்து விட்டார். ஆனால் கும்ளே ஓய்வு பெற்ற பிறகு கூட டெஸ்ட் அணிக்கு கயீஃபை கேப்டனாகவும் தோனியை ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கலாம் என்ற பேச்சு நிலவி வந்தது. ஆனால் கயீஃபின் பேட்டிங் ஃபார்ம் அவரைத் தடுத்துவிட்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் சில கிரிக்கெட் வீர்ர்களின் கரியர் அப்படியே நின்று போனது என்பதில் கயீஃபின் கரியர்தான் புதிரானது. எப்போதும் காயமடைந்த வீரருக்குப் பதிலாக இந்திய அணியில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய அவர், அதன் பிறகு மீண்டும் பெஞ்சிற்கு அனுப்பப்படுவார். இதுதான் அவருக்கு நடந்தது.

2000ஆம் ஆண்டு இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்தார். ஆனால் ஆலன் டொனால்ட் உள்ளிட்டவர்களின் ஆக்ரோஷத்தில் அவரது ஆட்டம் சற்றே நிலைகுலைந்தது. 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இவர் எடுத்த 91 ரன்கள் இந்தியாவை நிச்சயமான தோல்வியிலிருந்து காப்பாற்றியது. ஆனால் மொஹாலிக்குச் சென்றபோது மீண்டும் பெஞ்சிற்குச் சென்றார் கயிஃப்.

பயிற்சியாளர் கிரெக் சாப்பல் இவரது உத்திகளில் தவறுகளைக் காணத் தொடங்கினார். பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 9 இன்னிங்ஸ்களில் 37 ரன்களே அவரால் எடுக்க முடிந்தது. சச்சின் டெண்டுல்கர் காயமடைந்தபோது மேற்கிந்திய தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் 3 அரைசதங்கள் கண்டார். அவர் ஒரே ஒரு சதமே டெஸ்ட் போட்டியில் எடுத்தார். அதுவும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயிண்ட் லூசியாவில் அடித்த சதம். இதுதான் அவர் விளையாடிய கடைசி முழுத் தொடர்.

26 வயதில் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது. பயிற்சியாளர் மட்டத்தில் அதிகத் தொகை செலவு செய்த பிசிசிஐ, தலைமைக்கான ஒரு சிறந்த வீரரை மேலும் ஊக்குவித்துக் கொண்டுவர தவறிவிட்டது என்றே கூறவேண்டும். அவரது திறமையை ஒழுங்காக வளர்த்தெடுத்துச் செல்லும் சிறந்த ஊக்குவிப்பாளர்கள் கயீஃபிற்கு அமையாமல் போனது இந்திய கிரிக்கெட்டிற்கு இழப்பே.

ஆனால் மனம் தளராத அவர் சுரேஷ் ரெய்னா, பிரவீண் குமார் உள்ளிட்ட வீரர்களை இந்தியாவுக்காக தனது கேப்டன்சியின் கீழ் தயார் படுத்திக் கொடுத்துள்ளார். இப்போது ஆந்திராவிலிருந்து சிறந்த வீரர்கள் இந்தியாவுக்குக் கிடைப்பார்கள் என்று நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x