Published : 24 Aug 2023 03:11 PM
Last Updated : 24 Aug 2023 03:11 PM

“இந்திய மிடில் ஆர்டர் பலவீனமானது; பாகிஸ்தானுக்கே வெற்றி வாய்ப்பு” - ரஷித் லத்தீஃப்

ரோகித் சர்மா மற்றும் பாபர் அஸம்

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை எனும் பெரிய தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் உலகக் கோப்பையின் சாராம்சம் போல் உயர்வு நவிற்சிகள், ஊதிப்பெருக்கல்கள், தூண்டி விடும் பேட்டிகள் என்று இன்னும் எத்தனை எத்தனையோ வரவிருக்கின்றன. இந்நிலையில், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீஃப். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கவாஸ்கரே கடுப்பாகி விமர்சிக்க வேண்டாம், அவரவர் தங்களுக்கு விருப்பமான வீரரை தேர்வு செய்யவில்லை என்று தேர்வு செய்யப்பட்ட வீரரை விமர்சிக்காதீர்கள். இதுதான் அணி. ஆட்டத்தை பார்க்க இஷ்டம் இருந்தால் பாருங்கள். இல்லையெனில் வாயை மூடுங்கள் என்று ரசிகர்களின் வாயை அடைக்க பார்க்கிறார். கவாஸ்கரே கூட அணித்தேர்வுகளை முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் முன்னால் அறிவிப்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் வெறும் பட்டியல் மட்டும்தான் வெளியாகிறது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

எல்லா இடங்களிலும் வாய்க்கு பிளாஸ்திரி ஒட்டப்படுவது போல் கிரிக்கெட்டிலும் விமர்சன வாய் அடைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில்தான் ரஷித் லத்தீஃப் இந்திய மிடில் ஆர்டர் பலவீனமானது என்கிறார். ரோகித் சர்மா, ஷுப்மன் கில் ஓப்பனிங், ஒன் டவுன் விராட் கோலி, மிடில் ஆர்டர் என்றால் ஸ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ராகுல் ஆகியோர்தான். இதில் அய்யர், ராகுல் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளனர். சூர்யகுமார் ஆட்டம் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. திலக் வர்மா புது முகம் அவர் மீது அழுத்தம் ஏற்ற முடியாது.

ரஷித் லத்தீஃப் சொல்வதைப் பார்ப்போம்: “பாகிஸ்தான் பேட்டர்கள் பவர் ப்ளேயில் கொஞ்சம் ஸ்லோவாக ஆடுகின்றனர். முடிவு ஓவர்களுக்கான பவர் ஹிட்டர்களும் இல்லை. ஆனால், பவர் ப்ளே பந்து வீச்சில் நாம் அபாரமாக திகழ்கிறோம். பாகிஸ்தான் பவுலிங்கில் பிரச்சினை என்னவென்றால் 11-வது ஓவர் முதல் 40-வது ஓவர் வரை விக்கெட் எடுக்க ஆளில்லை. ஷதாப் கான் ஆகட்டும், மொகமத் நவாஸ் ஆகட்டும் விக்கெட் எடுக்க பாடுபடுகின்றனர். இங்குதான் ரோகித் சர்மா, விராட் கோலி நின்றுவிட்டால் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது பாகிஸ்தானுக்கு. ஏனெனில், இருவருமே பெரிய ஸ்கோர்களை எடுப்பவர்கள். நம் டாப் ஆர்டர் வீரர்களை விட கோலி, ரோகித் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவார்கள். இது இந்தியாவுக்குச் சாதகம்.

ஆனால், பாகிஸ்தானின் சாதகம் அவர்களது பந்து வீச்சு. வேகப்பந்து வீச்சில் பெரிய பலம் உள்ளது. ஆனால், பந்துகள் திரும்பும் ஸ்லோ பிட்ச்களில் வேகப்பந்து வீச்சின் முனைப்பு அழிக்கப்பட்டு விடும். பேட்டிங்கில் இமாம் உல் ஹக், பாபர் அஸம், ரிஸ்வான், பகர் ஜமான் ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். பிறகு ஷாஹின் அஃப்ரிடி, சதாப் கான், முகமது நவாஸ் ஆட்டோமேட்டிக்காக தேர்வு ஆவார்கள்.

ஆனால், இந்தியா மற்ற அணிகளை ஒப்பிடுகையில் மிடில் ஆர்டர் வரிசையில் திணறி வருகிறது. அந்த இடத்தில்தான் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் தொடரை வெல்ல வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் அணியின் பிரச்சினையே அல்லது சவாலே அதை கணிக்க முடியாது என்பதே. அன்றைய தினத்தில் ஷாஹின் அஃப்ரிடிக்கோ அல்லது பாபர் அஸமுக்கோ ஆட்டம் பிடித்து விட்டால் எந்த அணிக்குமே பிரச்சினைதான். ஆனால், இந்திய அணி நிறைய சந்தேகங்களுடன் ஆடுகிறது. ஒரு தைரியமான அணுகுமுறை இல்லை. அவரவர் தன்னை அணியில் தக்கவைத்துக் கொள்ள ஆடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x