Published : 13 Dec 2017 06:08 PM
Last Updated : 13 Dec 2017 06:08 PM
ரோஹித் சர்மா புதனன்று தனது 3-வது ஒருநாள் இரட்டைச் சதத்தை எடுக்க, பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. இந்திய அணி 300+ ரன் எண்ணிக்கையை 100-வது முறையாக எடுக்கும் முதல் அணியானது.
ரோஹித் சர்மா மட்டும் 3 இரட்டைச் சதங்கள், மற்ற வீரர்கள், அதாவது சச்சின், சேவாக், கெய்ல், மார்டின் கப்தில் ஆகியோர் 1 இரட்டைச் சதம்.
சேவாகுக்குப் பிறகு கேப்டனாக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி இன்னொரு சாதனைக்குரியவரானார் ரோஹித் சர்மா.
முதல் சதத்தை 115 பந்துகளில் எடுத்த ரோஹித் சர்மா 2-வது சதத்தை அடுத்த 36 பந்துகளில் எடுத்தார். 116-லிருந்து 208 ரன்களுக்கு 27 பந்துகளில் சென்ற ரோஹித் சர்மா இதில் 11 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை விளாசினார்.
ஒருநாள் போட்டிகளில் சதமடித்த பிறகு ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் 188.39. இந்தப் போட்டியில் சதம் எடுககும் போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 86.95. சதமடித்த பிறகு ஸ்ட்ரைக் ரேட் 284.21. இதற்கு முந்தைய 2 இரட்டைச் சதங்களின் போது கூட ரோஹித் சர்மாவின் சதத்துக்குப் பிறகான ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி 10 ஓவர்களில் ரோஹித் சர்மா மட்டும் 37 பந்துகளில் 110 ரன்கள் விளாசினார். 2001-க்குப் பிறகு இது 4-வது பெரிய ரன்விகிதமாகும். 2014-ல் 264 ரன்களை இதே இலங்கை அணியுடன் அவர் அடிக்கும் போது 44 பந்துகளில் கடைசி 10 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் விளாசிய அன்று கடைசி 10 ஓவர்களில் 35 பந்துகளை எதிர்கொண்டு 96 ரன்களை விளாசினார் ரோஹித் சர்மா.
கடைசி 7 ஓவர்களிலும் ரோஹித் சர்மா சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளார், ஜோஸ் பட்லர் கடைசி 7 ஓவர்களில் 31 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்க, ஏ.பி.டிவிலியர்ஸ் 27 பந்துகளில் 93 ரன்களை விளாசி 2-வது இடம் பிடிக்க ரோஹித் சர்மா 27 பந்துகளில் 92 ரன்களுடன் 3-ம் இடம் வகிக்கிறார். மொத்தம் 6 வீரர்கள் கொண்ட இந்த கடைசி 7 ஓவர்கள் அதிரடி சாதனைப் பட்டியலில் ரோஹித் சர்மா 3 முறை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
16-வது சதத்தை எடுத்த ரோஹித் சர்மா சேவாகின் 15 ஒருநாள் சத சாதனையைக் கடந்துள்ளார். சச்சின் 49, கோலி 32, கங்குலி 22 ஆகியோர் இவருக்கு முன்னிலையில் உள்ளனர்.
ஒரே ஆண்டில் 6 சதங்கள் எடுத்ததில் 2017-ல் ரோஹித் சாதனை படைத்துள்ளார். 2000-ம் ஆண்டில் கங்குலி 6 சதங்களை எடுக்க, சச்சின் டெண்டுல்கர் 1997, 98 ஆகிய 2 ஆண்டுகளில் 6 சதங்களை எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
வஹாப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ரன்களை கொடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் பட்டியலில் முதலிடம் வகிக்க இன்று நுவான் பிரதீப் 106 ரன்கள் கொடுத்து 3-ம் இடத்தில் உள்ளார். குறிப்பாக ரோஹித் சர்மா இவரது 32 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். ஒரு குறிப்பிட்ட பவுலரை விளாசிய கணக்கிலும் டிவில்லியர்ஸ் முதலிடம் வகிக்கிறார், இவர் மே.இ.தீவுகளின் ஜேசன் ஹோல்டரை 21 பந்துகளில் 76 ரன்கள் விளாசி முதலிடம் வகிக்கிறார். தோனி, இலங்கை லெக்ஸ்பின்னர் உப்புல் சந்தானாவை 2005-ம் ஆண்டு 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் வார்னர் அதிவேக பவுலர் ரபாடாவை 33 பந்துகளில் 60 ரன்கள் விளாசியது கவனிக்கத்தக்கது.
100-வது முறையாக 300 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்த முதல் அணியானது இந்திய அணி. ஆஸ்திரேலியா அடுத்த இடத்தில் 96 முறை கடந்து 2-வதாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT