Published : 22 Aug 2023 03:00 PM
Last Updated : 22 Aug 2023 03:00 PM
தன்னை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது தன் மீதே தனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது என்றும், அது வெறுப்பையும், சலிப்பையும் தந்தாலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய தன்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சி இருக்கிறது என்றும் உணர்கிறார் புஜாரா. இதனை அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜாரா, கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.அதில் சோபிக்கவில்லை. ஆனால், இவர் மட்டுமா சோபிக்கவில்லை? தோற்றால் யாரையாவது நீக்கி கண் துடைப்பு செய்ய வேண்டும். அதற்கான பலிகடாவாக இவரை உட்கார வைத்து விட்டனர். கேட்டால் புஜாராவைக் கடந்து செல்கிறோம் என்பார்கள்.
ஆனால் கோலியை கடந்து செல்கிறோம், ரோகித் சர்மாவை கடந்து செல்கிறோம் என்று ஒரு போதும் கூற மாட்டார்கள். ஏனெனில், புஜாராவுக்கு அவர்கள் அளவுக்கு ஐபிஎல் மற்றும் வணிக ஆதரவுக் குரல்கள் அறவே இல்லை என்பதுதான் உண்மை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சியில் புஜாரா 928 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் விராட் கோலி 932 ரன்களுடன் இருக்கிறார். ஆனால், இருவரது சராசரியும் 32 தான். இந்தியாவின் டாப் 2 வீரர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி சராசரி 32 தான் எனும் போது ஒருவரை அணியிலிருந்து தூக்கி விட்டு இன்னொருவரை வைத்திருப்பதன் ரகசியம் கோலியின் வர்த்தக உடன்படிக்கைகளே என்பது பலரும் அறிந்ததே.
இன்னொரு புள்ளி விவரம் கோலி 70க்கும் அதிகமாக ரன்கள் எடுத்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 18-ல் வென்று 10-ல் தோற்றுள்ளது. இதை புஜாராவுடன் ஒப்பிடுகையில் 34 டெஸ்ட் போட்டிகளில் புஜாரா 70+ ஸ்கோர்களை எடுத்த போது 23-ல் வென்று 6 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றுள்ளது என்கிறது தரவுகள்.
தற்போது சசெக்ஸ் அணிக்காக இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆடிவரும் புஜாரா, அங்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: “கடந்த சில ஆண்டுகளில் ஏற்றமும், இறக்கமும் இருந்தன. ஆனால், 90 டெஸ்ட்களில் ஆடிய பிறகும் உங்களை நீக்க முடியும் என்றால் நீங்கள் இன்னும் உங்களை நிரூபிக்க முடியும் என்ற அர்த்தமும் அதில் தொனிக்கிறது என்று தானே பொருள். நான் அந்த டெஸ்ட் அணியைச் சேர்ந்தவன் என்று நான் நிரூபிக்க வேண்டும். இன்னமும் கூட நான் நிரூபிக்கக் கடமை உள்ளவனாக ஆக்கப்பட்டுள்ளேன். இது ஒரு வித்தியாசமான சவால்.
ஆனால், இதுவே வெறுப்பையும், சலிப்பையும் உண்டாக்குகிறது. 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5000 - 6000 ரன்கள் எடுத்த பிறகும் நாம் நம்மை நிரூபிக்க கடமைப்பட்டுள்ளோம் என்பது எளிதானதல்ல. சில வேளைகளில் இது நம் ஈகோவில் புகுந்து விளையாடுகிறது. சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்ற போதிலும் இன்னும் நம் மீது சந்தேகம் இருக்கிறது என்றால் அதனால் என்ன பயன் என்று தோன்றுகிறது. மீண்டும் மீண்டும் நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டால், அப்படி நிரூபிப்பது எந்த விதத்திலாவது பயன் தருமா, அதற்கு தகுதியுடையதுதானா இந்த நிரூபிப்பு என்ற கேள்வி எழுகிறது.
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன், நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தைச் சேர்ந்தவன் என்று. நான் நிறைய பங்களிப்பு செய்துள்ளேன், இன்னும் செய்யவும் நிறைய உள்ளது. என்னைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான புள்ளி விவரம் ஒன்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதாவது நான் 70 - 80 ரன்கள் எடுக்கும் போட்டிகளில் 80 சதவீதம் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதே அது. அல்லது நாம் அந்த டெஸ்ட்டை தோற்கவில்லை என்றும் கூறலாம். ஆகவே நான் ரன்கள் எடுக்கும் போது இந்திய அணி வெற்றியின் பக்கம் நிற்கிறது.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை கடும் அழுத்தத்தில் தள்ளிய தருணங்கள் உண்டு. ஆனாலும் நாம் அணிக்காகவே ஆட வேண்டும். சுயநலத்துக்காக ஆடக்கூடாது. நம் அணியில் நம் இடத்துக்காக ஆடினால் நாம் சுயநலமிகள். நான் அணிக்கு பங்களிப்புச் செய்யவில்லை என்றால் நான் வீட்டில் இருப்பதை மகிழ்ச்சியுடன் விரும்புவேன். அதற்காக 20-30 ரன்கள் எடுத்து அவுட் ஆவது நோக்கமாக இருக்குமா என்ன? இன்னும் கூடுதலாக 20-30 ரன்களைச் சேர்த்து அணி வெற்றி பெறவில்லை எனில் அது இன்னிங்ஸ் ஆகுமா? இது எனக்கு தனிப்பட்ட முறையில் அணியில் என்னைத் தக்க வைக்க உதவும் ஆனால் அணிக்கு உதவாது. ஆகவே அணியில் இருப்பதென்றால் வெறுமனே இருப்பதல்ல. நாம் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும்” என அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT