Published : 22 Aug 2023 09:51 AM
Last Updated : 22 Aug 2023 09:51 AM
புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை தேர்வுக்குழுவினர் அறிவித்துள்ளனர். கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். இளம் வீரர் திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் சேர்க்கப்படவில்லை. கே.எல்.ராகுலுக்கு புதிதாக காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் 17 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று டெல்லியில் அறிவித்தார். 20 வயதான திலக் வர்மா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், நடுவரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி உள்ளனர். இதில் கே.எல்.ராகுல் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் கடந்த மே மாதம் முதல் சர்வேதச போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதேவேளையில் முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்திருந்த ஸ்ரேயஸ் ஐயர், மார்ச் மாதம் முதல் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார்.
கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர், முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அவருக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அஜித் அகர்கர் கூறும்போது, “கே.எல்.ராகுலுக்கு ஏற்பட்டுள்ளது இயல்பான காயம் இல்லை. சிறிய தொந்தரவு இருக்கிறது அவ்வளவுதான். இதனாலேயே சஞ்சு சாம்சனும் ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணியினருடன் இலங்கை செல்கிறார். கே.எல்.ராகுல் உடற்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கிறோம். முதல் ஆட்டத்தில் அவர், விளையாடாவிட்டால் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆட்டத்தில் களமிறங்குவார். ஸ்ரேயஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்” என்றார்.
சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் இடம் பெறவில்லை. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுடன் ஷர்துல் தாக்குர் இடம் பெற்றுள்ளார். பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, மொகமது சிராஜ் ஆகியோருடன் அயர்லாந்துக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பிரசித் கிருஷ்ணாவுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, மொகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரர்).
அஸ்வின், சாஹல் ஏன் இல்லை? தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “ஆஃப் ஸ்பின்னர்களில் நாங்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் பற்றியும் யோசித்தோம். ஆனால் தற்போது 17 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடிந்ததால் யுவேந்திர சாஹலும் வெளியே இருக்கிறார். யுவேந்திர சாஹலை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு உள்ள ஒரே வழி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்க வேண்டும்.
நாங்கள் அதை செய்ய முடியாது. ஏனெனில் அடுத்த இரு மாதங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் பெரிய அளவில் பங்கு வகிப்பார்கள். இவர்களில் சிலர், நீண்ட நாட்களுக்குப்பின்னர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதனால் அவர்கள் எந்த வகையிலான செயல்திறனை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
யாருக்கும் கதவுகள் அடைக்கப்படவில்லை. எந்தநேரத்திலும் யாரும் அணிக்குள் வரலாம். யுவேந்திர சாஹல் உலகக் கோப்பை தொடருக்கு தேவை என நாங்கள் உணர்ந்தால், அவரை எப்படி அணிக்குள் கொண்டு வருவது என பார்ப்போம். அஸ்வின், வாஷிங்டன் சுந்தருக்கும் இதே நிலைதான்” என்றார்.
திலக் வர்மாவுக்கு வாய்ப்பு ஏன்? இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறும்போது, “மேற்கிந்திய தீவுகளில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியுடன் அழைத்துச் செல்லவும், திறனை மேலும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பையும் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு இடது கை வீரர், மிகவும் நம்பிக்கைக்குரியவராக திலக் வர்மா தெரிகிறார்.
அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஆசிய கோப்பை தொடருக்கு 17 பேரை தேர்வு செய்துள்ளோம். இது உலகக் கோப்பையில் 15 ஆக இருக்கும். நேரம் வரும் போது நாங்கள் அந்த முடிவை எடுப்போம். ஆனால் இந்த நேரத்தில், குறைந்தபட்சம், பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு திலக் வர்மாவை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment