Published : 21 Aug 2023 06:45 PM
Last Updated : 21 Aug 2023 06:45 PM
மும்பை: வரும் 30-ம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஸ்வின், சஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்க்கர், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார். அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ரோகித் சர்மாவும் பங்கேற்றார். அப்போது அவரிடம் உலகக் கோப்பை வெல்லும் பேவரைட் அணிகளில் இந்தியாவும் உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார்.
“எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கோப்பை வெல்ல வேண்டுமென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சொந்த நாட்டில் விளையாடுவது சாதகம். மற்ற அணிகளும் இங்கு நிலவும் கள சூழலை நன்கு அறிவார்கள். அதேபோல உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அஸ்வின், சஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவுகள் இன்னும் அடைக்கப்படவில்லை.
அக்சர் படேல் அணியில் இருப்பது பேட்டிங்கில் வலு சேர்க்கும். 8 அல்லது 9-வது இடத்தில் இறங்கி பேட் செய்வார். நடப்பு ஆண்டில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான அவரை வேண்டுமானால் பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே கூட களம் இறக்கலாம் என்ற ஆப்ஷன் உள்ளது” என ரோகித் தெரிவித்தார்.
“செப்டம்பர் 5-ம் தேதி தான் உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கான கெடு தேதி நிறைவடைகிறது. அதற்கு கூடுதல் நேரம் உள்ளதால் வீரர்களின் செயல்பாட்டை கவனித்து அணி அறிவிக்கப்படும்” என அஜித் அகர்க்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT