Published : 21 Aug 2023 04:52 PM
Last Updated : 21 Aug 2023 04:52 PM
2019 உலகக் கோப்பைக்கு முன்பிருந்தே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 4-ம் நிலை வீரருக்கான தேடல் இந்திய அணியில் இருந்து வருகின்றது. அம்பாத்தி ராயுடு முதல் பலரையும் இந்த டவுனில் முயற்சி செய்து ஒன்றும் தோது படாமல் போனது. 4-ம் நிலை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த டவுனில் இறங்குபவர்கள் அணியை வெற்றிக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்க கடைசி வரை நின்று வழி நடத்திச் செல்ல வேண்டும். அதற்கு அனுபவமும், அதிரடித் திறமையும் தேவை. அதனால்தான் இந்த நிலையில் யார் என்பது பெரிய தொடர்களுக்கு முன்பாக முக்கியமான கேள்வியாக வந்து நிற்கிறது?
2007 உலகக் கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கரை அந்த அனுபவம் வாய்ந்த இடத்துக்கு பயன்படுத்த அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் கண்ட கனவு பொய்த்துப் போனது. சச்சின் ஒத்துழைக்கவில்லை. மாறாக தொடக்கத்தை அவரிடமிருந்து பறித்ததால் 2007 உலகக் கோப்பையிலிருந்து சடுதியில் இந்திய அணி வெளியேற நேரிட்டது.
இந்நிலையில், சவுரவ் கங்குலி கூறுவது ஒரு புறம் ஆச்சரியமாகவே இருக்கிறது. அதாவது 4-ம் நிலைக்கு ஆட்களே இல்லை என்பதல்ல. மாறாக நிறைய வீரர்கள் உள்ளனர் என்பதுதான் விஷயம் என்கிறார் கங்குலி. அதாவது விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் என்று நிறைய தெரிவுகள் உள்ளன. மேலும் 4-ம் நிலையில் இவர்தான் இறங்க வேண்டும். வேறு யாரும் இறங்கக் கூடாது என்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. தேவைக்கேற்ப மாற்றி இறக்கலாம் என்கிறார் சவுரவ் கங்குலி.
கங்குலி ஒரு பெரிய கேப்டன் என்பதால் அவருக்கு இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. மேலும், தேவைக்கேற்ப யாரையும் இறக்கலாம் என்று அவர் கூறுவது கேப்டன்சி மீதான அவரது தீராத தன்னம்பிக்கையை இன்றைக்கும் எடுத்துரைப்பதாக உள்ளது.
“நம்பர் 4 என்பது வெறும் எண் தான். அதில் யாரும் இறங்க முடியும். யாரும் பிறவி தொடக்க வீரர், பிறவி 2, 3, 4-ம் நிலை வீரர் என்றெல்லாம் கிடையாது. நான் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் வீரனாகத்தான் நுழைந்தேன். என்னை தொடக்க வீரராக இறங்கச் சொன்னார் சச்சின் டெண்டுல்கர். ஏனென்றால், அவர் அப்போது கேப்டன். சச்சின் டெண்டுல்கரும் 6-ம் நிலையில் இறங்கியுள்ளார். ஆனால், தொடக்க வீரராக ஆனபிறகு உலகத்தரம் வாய்ந்த வீரர் ஆனார்.
ஆகவே 4-ம் நிலையில் யார் வேண்டுமானாலும் இறங்கலாம். ஸ்ரேயஸ் அய்யர் இருக்கிறார், விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளனர். இந்திய அணியில் திறமைகள் அதிகம் உள்ளன. என்னிடம் எப்போதும், ‘நம் அணியில் இது இருக்கிறதா? ஏன் அது இல்லை’ என்ற ரீதியில் கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கம். நான் என்ன கூறுகிறேன் என்றால் நம்மிடம் கூடுதலாகவே வீரர்கள் இருக்கின்றனர்.
ராகுல் திராவிடும், ரோகித் சர்மாவும் முடிவு செய்து இவர்தான் நம் 4-ம் நிலை வீரர் என்று திட்டவட்டமாக முடிவுக்கு வந்து உலகக் கோப்பை வரை அந்த வீரரையே இறக்க வேண்டும். ஒரு பேட்டிங் நிலையில் ஓட்டை இருப்பதால் குடிமுழுகி விடாது. நான்காம் நிலையால் மட்டுமே நாம் உலகக் கோப்பையை வெல்ல போவதில்லை. யாராவது ஒருவரை முடிவெடுத்து, அவரை ஆதரித்து, தொடர்ச்சியாக ஆட வைக்க வேண்டும்.
இந்த இந்திய அணி அரையிறுதிகளில் நுழைகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறினர். எனவே அடுத்தது இறுதி என்னும் பாலத்தை கடக்க வேண்டும். நிச்சயம் அதை செய்வார்கள். இந்த இந்திய அணி மீது எனக்கு கடும் நம்பிக்கை இருக்கிறது. ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியா தொடர் ஆகியவற்றில் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்ப்போம். அனைவரும் ஃபார்மில் இருக்க வேண்டும். அதுதான் முக்கியமே தவிர ஒரு பேட்டர் அல்லது ஒரு பேட்டிங் நிலையால் நாம் வெற்றி பெற்று விட முடியாது.
பந்து வீச்சில் பும்ரா அருமையாக வீசுகிறார். அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளைப் பார்த்தேன். இவருடன் ஷமி, சிராஜ் உள்ளனர். ஜடேஜா, ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப், பாண்டியா உள்ளனர். முகேஷ் குமார் சமீபமாக நன்றாக ஆடினார். எனவே பிரச்சினை இல்லை. இப்போதைய பிரச்சினை யாரை அணிக்குள் மற்றும் ஆடும் லெவனில் எடுப்பது என்பதுதான்” என்கிறார் கங்குலி.
ஆனால் இவர் சொல்வது போல் 4-ம் நிலை பிரச்சினை அத்தனை சுலபமல்ல. யார் அந்த வீரர் என்பதல்ல பிரச்சினை. அந்த டவுன் ஆர்டரில் என்ன சூழ்நிலையில், அந்த வீரர் எப்படி ஆட வேண்டும் என்ற திட்டம் சரியாக இருக்க வேண்டும். அதை நிறைவேற்றும் போது அது வெற்றியடைய வேண்டும் என்பதுதான் பிரச்சினை. எடுத்துக் காட்டாக ரிஷப் பந்த், அந்த டவுனில் இறங்குகிறார் என்றால் அவரிடம் போய் நின்று ஆடு என்று சொன்னால் அது எதிர்மறையாக முடியும்.
ஸ்ரேயஸ் அய்யரை போய் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆடு என்று சொன்னாலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகவே, எந்த டவுனில் யார் இறங்குகிறார்கள் என்பதல்ல சிக்கல். என்ன திட்டம் என்பதில்தான் சிக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT