Published : 20 Aug 2023 10:19 PM
Last Updated : 20 Aug 2023 10:19 PM
சிட்னி: நடப்பு பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்தின. இந்த கால்பந்து திருவிழா கடந்த மாதம் 20-ம் தேதி (ஜூலை) தொடங்கி இன்று (ஆகஸ்ட் 20) வரை நடைபெற்றது. மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை மேற்கொண்டன. 8 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. மொத்தம் 64 போட்டிகள். இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஸ்பெயின் மற்றும் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வென்றது இல்லை. அதனால் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் ஸ்பெயின் அணியின் ஓல்கா கார்மோனா. அது அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான கோலாக அமைந்தது. இறுதி வரை கோல் பதிவு செய்ய இங்கிலாந்து மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் 486 பாஸ்களை மேற்கொண்டது ஸ்பெயின் அணி. 5 முறை டார்கெட்டை நோக்கி பந்தை விரட்டி இருந்தது. ஆட்டத்தில் சுமார் 58 சதவீதம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின். இந்த தொடரில் 5 கோல்கள் மற்றும் 1 அசிஸ்ட் செய்தமைக்காக தங்கக் காலணி விருதை ஜப்பான் வீராங்கனை ஹனடா மியாசாவா வென்றார். தங்கப் பந்து விருதை ஸ்பெயின் அணியின் எய்ட்டனா பான்மதி வென்றார். கோல்டன் கிளவ் விருதை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி ஏர்ப்ஸ் வென்றார்.
A moment they'll never forget @SEFutbolFem | #FIFAWWC
— FIFA Women's World Cup (@FIFAWWC) August 20, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT