Published : 19 Aug 2023 12:18 PM
Last Updated : 19 Aug 2023 12:18 PM
புடாபெஸ்ட்: கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு நடந்த மதிப்பு மிக்க டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்தாலும் 90 மீ தூரம் என்பது ஒரு கனவாகவே அவருக்கு இருந்து வருகின்றது. ஆனால் 90 மீ தூரம் எறியும் மைல்கல்லை நிச்சயம் எட்டுவேன் என்கிறார் நீரஜ் சோப்ரா.
ஜியோ சினிமாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நிச்சயமாக 90 மீ தூரம் எறிவதற்கு அருகில் தான் இருக்கின்றேன். நல்ல ஒரு தட்பவெப்ப நிலைமையுடன் கூடிய ஒரு நல்ல நாள் சிக்கினால் போதும் 90 மீ தூரம் என்ற சாதனை நிகழும். எனக்கு அழுத்தங்களைக் கையாண்டு பழக்கமாகிவிட்டது. குறிப்பாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் போன்றவை வரும் போது பொறுப்பு அதிகரிக்கின்றது.
நான் எப்பவும் 100% பங்களிப்பு செய்யவே முயற்சி செய்கிறேன். என் கவனம் முழுதையும் செலுத்துகிறேன். முன்பெல்லாம் பிற காரணிகள் சில என்னை ஆட்கொள்ளும் ஆனால் அவற்றையும் இப்போது நிர்வகிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்.
உயர் மட்டத்தில் பெரிய வீரர்களுடன் போட்டியிடுவதில் சீரான முறையில் நம் ஆட்டத்தை ஆடுவது என்பது சவால்தான். ஆண்டின் தொடக்கத்தில் நன்றாக பயிற்சியில் ஈடுபட்டேன், பிறகு காயமடைந்ததால் சிலபல தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனது. அதன்பிறகு லாசேன் டைமண்ட் லீகில் கலந்து கொண்டேன். அங்கு என் ஆட்டம் நன்றாக இருந்தது. அது முதல் என் ஆட்டம் பயிற்சிகள் நல்ல முறையில் அமைந்து வருகின்றன.
உலக சாம்பியன்ஷிப் வரவிருப்பதால் மன ரீதியாக அதற்குத் தயார்படுத்துவதில் கவனம் மேற்கொண்டு வருகிறேன். அதற்காக இவ்வளவு தூரம் விட்டெறிய வேண்டும், பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கையெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. பங்கு பெறும் போது காயமடைந்து விடும் பயம் நம்மிடம் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். சிறப்பாக ஆட நினைக்கிறேன், எனவே எது வந்தாலும் இந்தத் தொடர்களுக்கு முன்னால் வரட்டும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க பெரிய வீரர்கள் பங்கு பெறும் டைமண்ட் லீக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் ஆட விரும்புகிறேன். இப்படிச் செய்யும் போது உலக சாம்பியன்ஷிப் அல்லது ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் போது இதுவும் இன்னொரு தொடர் என்ற மனநிலை வரும் அப்பொது அழுத்தம் இருக்காது.
இவ்வாறு கூறுகிறார் நீரஜ் சோப்ரா. தோஹா டைமண்ட் லீகில் மற்ற ஈட்டி எறிதல் ஜாம்பவான்கள் 90 மீ தூரம் என்ற மைல்கல்லைத் தாண்டினர். கிரெனடா நாட்டு ஜாவ்லின் த்ரோயர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஈட்டி எறிதல் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய த்ரோ தூரமான 93.07 மீ தூரம் எறிந்தார். சோப்ரா அந்த மைல்கல்லை எட்ட முதலில் 90 மீ தூரத்தை எட்ட வேண்டும் என்று போராடி வருகின்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT