Published : 19 Aug 2023 06:36 AM
Last Updated : 19 Aug 2023 06:36 AM
டசல்டார்ஃப்: 4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய ஜூனியர் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரில் 4 நாடுகள் பங்கேற்றுள்ள ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று ஸ்பெயினுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை சிறப்பான முறையில் தொடங்கியது.
இந்திய அணி சார்பில் ரோஹித் (28 மற்றும் 45-வது நிமிடங்கள்), சுதீப் சிர்மகோ (35 மற்றும் 58-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும் அமன்தீப் லக்ரா (25-வது நிமிடம்), பாபி சிங் தாமி (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்திய அணி தொடக்கத்தில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்தது. முதல் நிமிடத்தில் நிக்கோலஸ் அல்வரெஸும், 23-வது நிமிடத்தில் கோரேமினாஸும் அடித்த பீல்டு கோல் காரணமாக ஸ்பெயின் 2-0 என முன்னிலை வகித்தது. ஆனால் அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டனர். 25 மற்றும் 28-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி கோலாக மாற்றியது. இதனால் முதல் பாதி ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.
35-வது நிமிடத்தில் சுதீப் சிர்மகோ அடித்த பீல்டு கோல் காரணமாக இந்திய அணி 3-2 என முன்னிலை பெறத் தொடங்கியது. தொடர்ந்து ரோஹித், பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற இந்திய அணி 4-2 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. 2 கோல்கள் பின்தங்கிய நிலையில் ஸ்பெயின் சில தாக்குதல் நகர்வுகளை மேற்கொண்டது. ஆனால் அவற்றுக்கு பலன் கிடைக்கவில்லை.
53-வது நிமிடத்தில் தாமிகாவும், போட்டிமுடிவடைய 2 நிமிடங்கள் இருந்த நிலையில் சிர்மகோவும் கோல் அடித்து அசத்த இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று தொடரை நடத்தும் ஜெர்மனியை சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT