Published : 18 Aug 2023 02:18 PM
Last Updated : 18 Aug 2023 02:18 PM

ODI WC 2023 | இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும்: டிவில்லியர்ஸ் கணிப்பு

மும்பை: எதிர்வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகளில் ஒன்றாக நிச்சயம் இந்தியா இருக்கும் என முன்னாள் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன. இந்தட்ஜ் தொடரில் பங்கேற்க உள்ள உலக நாடுகளை சேர்ந்த அணிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்தச் சூழலில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கொண்டுள்ள நான்கு அணிகளை கணித்துள்ளார் டிவில்லியர்ஸ். தனது யூடியூப் சேனலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“நிச்சயம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். இந்த முறை அவர்கள் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கூட உள்ளது. உலகக் கோப்பை தொடரின் கதை மிகவும் விசித்திரமானது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும். நான்காவது அணியாக தென் ஆப்பிரிக்கா இணைய வாய்ப்புள்ளது. பாகிஸ்தானும் முன்னேறலாம். ஆனால், நான் தென் ஆப்பிரிக்கா செல்லும் என நம்புகிறேன். திறமையான வீரர்கள் அணியில் உள்ளனர்.

நான் ஆசிய கண்டத்தை சாராத 3 அணிகளை தேர்வு செய்துள்ளேன். அது கொஞ்சம் ரிஸ்க் தான். இருந்தாலும் எனது முடிவில் நான் உறுதியாக உள்ளேன். ஏனென்றால் இந்தியாவில் ஆடுகளங்கள் அருமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கை தான். மோசமான விக்கெட்டை இந்த தொடரில் நாம் பார்க்க முடியாது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புள்ளது” என மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x