Published : 17 Aug 2023 07:08 PM
Last Updated : 17 Aug 2023 07:08 PM
இங்கிலாந்து தனது உலகக்கோப்பை அணியை அறிவித்ததில் பலருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் என்னவெனில் அந்த அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் ஹாரி புரூக் இல்லாததே. பிரெண்டன் மெக்கல்லம்-பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் உருவான பாஸ்பால் அதிரடி அணுகுமுறையில் பெரிய அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எழுச்சி பெற்றவர் ஹாரி புரூக். அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைத்தது நியாயமா என்று இங்கிலாந்து ரசிகர்கள் உட்பட ஊடகங்கள், முன்னாள் வீரர்கள், பண்டிதர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பென் ஸ்டோக்ஸ் தன் ஓய்விலிருந்து மீண்டு வந்து உலகக்கோப்பை அணியில் தேர்வாகியுள்ளார். அதுவும் ஆல்ரவுண்டராக அல்ல, ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக மட்டுமே அவர் செயல்படவுள்ளார். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தேர்வினால்தான் ஹாரி புரூக் தேர்வு செய்யப்படவில்லை என்று பலரும் கருதுகின்றனர். ஹாரி புரூக் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்கிறார் அணித்தேர்வாளர் லூக் ரைட். டெஸ்ட் போட்டிகளில் 12 டெஸ்ட்களில் 4 சதங்கள், 7 அரைசதங்களுடன் 1181 ரன்களை 62 என்ற சராசரியில் எடுத்துள்ளார் ஹாரி புரூக். டெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட் 91.76% என்பது ஒருநாள் போட்டிகளில் விளையாடினால் இன்னும் அதிகமாகவே மாறும் என்பதுதான் ஹாரி புரூக்கின் பேட்டிங் திறமை.
புரூக்கின் ஒருநாள் ஸ்கோர் திருப்திகரமாக இல்லை. அதாவது 3 ஒருநாள் போட்டிகளில்தான் ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக் காவுக்கு எதிரான அந்த 3 போட்டிகளில் அவரது ஸ்கோர் 0, 80,6 . இந்த 3 ஒருநாள் போட்டிகளை வைத்து அவரது வெள்ளைப்பந்து திறமைகளை எடைபோட முடியாது. ஹாரி புரூக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உலகக்கோப்பைக்குத் தேர்வாகாதது அவருக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அணித்தேர்வாளார் லூக் ரைட் கூறுவது என்னவெனில், “புரூக்கைப் பொறுத்தவரை அனைத்தும் அருமையாகவே நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை மறுக்க முடியாது. முன்னோக்கிப் பார்க்கையில் ஹாரி புரூக்கிற்கு எத்தனை பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை நினைக்க மகிழ்ச்சியாகவே உள்ளது. அனைத்து வடிவங்களிலும் அவருக்கு இடம் உண்டு” என்றார்.
இங்கிலாந்து அணி 6 முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது. இவர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்து கடும் பயணங்கள் நிறைந்த உலகக்கோப்பையில் காயங்களைத் தவிர்ப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்துகிறது. இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் புரூக்கிற்கு இடம் இல்லாமல் போயுள்ளது. ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 3ம் நிலையிலிருந்து 5ம் நிலை வரையிலான பேட்டிங் நிலையில் இறங்குவார்கள். லியாம் லிவிங்ஸ்டன் 6ம் நிலைக்கு ஒரு அதிரடி ஆல்ரவுண்டர் நிலைக்கு தயாராக இருக்கிறார்.
இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் வலுவானது. அந்த அணியின் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் எல்லோருமே மிடில் ஆர்டர் வீரர்களாகவும் உள்ளார்கள். அதனால்தான் புரூக்கிற்கு இடம் இல்லை. ‘இது மிக மிக கடினமான ஒரு முடிவே’ என்கிறார் லூக் ரைட். ஆனால் நம் கேள்வி என்னவெனில் திணறி வரும் ஜேசன் ராய் எதற்காகத் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. அவர் மீது இன்னும் இங்கிலாந்துக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஜேசன் ராய் இடத்தில் புரூக்கிற்கு ஒரு வாய்ப்பு கொடித்திருக்கலாம் என்றே பார்க்கப்படுகிறது.
புரூக் போன்ற ஓர் அருமையான இளம் அதிரடி வீரரை இங்கிலாந்து அணி தேர்வு செய்யாமல் போனது இங்கிலாந்தின் பழைய அணுகுமுறையினால் விளைந்ததல்ல மாறாக புரூக்கையே ட்ராப் செய்கிறோம் என்றால் எங்கள் அணி அத்தகைய வலு பெற்றது என்பதை அறிவிக்கவே என்று தெரிகிறது. எப்போதும் அட்டாக்கிங் பேட்டர்களை உலகக்கோப்பைக்கு இங்கிலாந்து ட்ராப் செய்வதுதான் வழக்கம். இது அந்த அணியின் பலவீனமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைய புரூக் ட்ராப் அந்த அணியின் புதிய திமிர் அதாவது நல்ல பொருளில் திமிர், தன்னம்பிக்கை என்னும் ஆணித்தரமாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT