Published : 16 Aug 2023 02:50 PM
Last Updated : 16 Aug 2023 02:50 PM
அகமதாபாத்: வரும் அக்டோபர் 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் விளையாடுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தச் சூழலில், அந்த நகரில் தங்கும் விடுதிக்கான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி உட்பட சில போட்டிகளுக்கான தேதியை பிசிசிஐ மாற்றி அமைத்தது. அது போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண அகமதாபாத் வரும் ரசிகர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் அதிகம் காத்திருக்கிறது.
உலகக் கோப்பையை நல்ல அனுபவமாக மாற்றுவோம், பயணங்கள் சிரமமின்றி தடையின்றி இருக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்தது. அது நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகம் தான். போட்டியை நேரில் காண வரும் ரசிகர்கள், தங்குமிடத்துக்கு செலவிடும் தொகை காரணமாக இந்தப் போட்டியை நேரில் சென்று பார்க்க வேண்டுமா என்ற கேள்வியை அவர்களுக்குள் எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
ரசிகர்களின் அல்லல்களை அதிகரிக்குமாறு இந்தியா-பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை தேதியை தாமதமாகவும் அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ம் தேதிதான் தொடங்குகிறது. ஆன்லைனில் கடும் சோதனைகளுக்குப் பிறகு ஒரு வழியாக டிக்கெட் கிடைத்து விட்டாலும் ஆன்லைன் டிக்கெட்டை அசல் டிக்கெட்டாக மாற்றுவது பெரிய சவால் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், அகமதாபாத்தில் தங்குவதற்காக வரும் ரசிகர்களுக்கு தங்கள் பாக்கெட்டை மட்டுமல்ல கூட வருபவர்களின் பாக்கெட்டும் காலியாகும் அளவுக்கு ஹோட்டல் கட்டணங்கள் எகிறி வருகின்றன.
சராசரி ஹோட்டல் கட்டணங்கள் 15 மடங்கு அதிகரித்துள்ளதாக கள தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இரவு தங்க ரூ.4,000 கட்டணம் வசூலிக்கும் விடுதிகள், இரு நபர்களுக்கு ரூ.60,000 என கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அறை முன்பதிவு செய்ய உதவும் புக்கிங்.காம் தளத்தில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது சாமானிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றால், நட்சத்திர விடுதிகளில் தங்கும் செல்வந்தர்களுக்கும் அதிர்ச்சிதான். நட்சத்திர விடுதிகளில் அறை வாடகை இரண்டு இரவுகளுக்கு 3 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளதாம். ஆனால், இங்கும் பணம் இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில், அணிகள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு பிசிசிஐ இதே நட்சத்திர விடுதிகளில் அறையை முன்பதிவு செய்திருப்பதால் இங்கு அறைகள் கிடைப்பதும் கடினம். அந்த இடத்தில் தான் அறை வேண்டுமென்றால் கட்டணம் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு.
போட்டி நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாக அகமதாபாத்துக்கு வந்து ஆன்லைன் டிக்கெட்டுகளை அசல் டிக்கெட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே, அங்கு முதல் நாளே இருந்தாக வேண்டும். அப்படி வரும் ரசிகர்கள் எங்கு தங்குவார்கள்? ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது குஜராத் கிரிக்கெட் சங்கம் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதாவது இறுதிப்போட்டிக்கு முன்பு முதல் நாள் டிக்கெட்டை பெறலாம் என்று அறிவுறுத்திய பிறகே மைதானத்தின் வாசலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் ஆன்லைன் டிக்கெட்தாரர்கள் க்யூ ஆர் கோடு முறை மூலம் எளிதில் மைதானத்துக்குள் வரவும், போகவும் முடிந்தது. உலகக் கோப்பையினால் விடுதி அறை வாடகை அதிகரித்து உள்ளதால், அந்தத் தேதிகளில் அயல்நாட்டிலிருந்து சிகிச்சைக்காக வருபவர்கள் அறை கிடைக்காமல் திண்டாடும் நிலையும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெகுலர் செக்-அப் செய்ய வருபவர்களே கூட இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிப்பதற்காக மருத்துவமனையில் முன் கூட்டியே அறையை புக் செய்வதும் நடக்கிறதாம்.
விடுதிகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதால் அகமதாபாத்தில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் சிலர் இந்த நிலையை பயன்படுத்தி பணம் ஈட்டும் தருணமாக மாற்றி உள்ளதாகவும் தகவல். மொய்த்ராவில் 2 பெட் ரூம் அபார்ட்மெண்ட் வீட்டில் 7 முதல் 8 பேர் வரை தங்க நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் கேட்கப்படுகிறதாம். சிங்கிள் ரூம் வேண்டுமென்றால் ஒரு இரவுக்கு ரூ.10000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதோடு விமான டிக்கெட்டுகள் விலைகள் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையைப் பொறுத்து தங்கும் விடுதிகள் தங்கள் கட்டணங்களை 50 சதவீதம் வரை அதிகரிக்க கூட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆங்காங்கே உள்ள விடுதிகளை ஐசிசி, பிசிசிஐ பதிவு செய்துள்ளன. எனவே இருக்கும் குறைந்த அறைகளுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் போது கட்டணம் உயர்வது இயல்புதானே என்கின்றனர் விடுதி உரிமையாளர்கள். ஆகவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்ப்பது இந்த முறை ரசிகர்களுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT