Published : 16 Aug 2023 07:45 AM
Last Updated : 16 Aug 2023 07:45 AM

ODI WC 2023 | செப்.3-ல் இந்தியா - பாக். ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை: ஐசிசி அறிவிப்பு

உலகக் கோப்பை

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும். இது அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐசிசி-யின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, "இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாதில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனைத்து ஆட்டங்களுக்குமான டிக்கெட் விற்பனை ஒரே நேரத்தில் நடைபெறாது. பகுதி, பகுதியாக டிக்கெட் விற்பனை நடைபெறும்.

குவாஹாட்டி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும்.

சென்னை, டெல்லி, புனே நகரங்களில் நடைபெறும் இந்தியா மோதும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.

தரம்சாலா, லக்னோ, மும்பையில் நடைபெறும் இந்தியா விளையாடவுள்ள ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைபெறும்.

பெங்களூரு, கொல்கத்தா நகரங்களில் நடைபெறும் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறும்.

அகமதாபாதில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ம் தேதி முதல் நடைபெறும்.

அரை இறுதி, இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கும்.

டிக்கெட் விற்பனைக்கு முன்னதாக ரசிகர்கள் https://www.cricketworldcup.com/register என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களைப் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் விற்பனை தொடர்பான விவரங்கள் ரசிகர்களுக்கு, குறுந்தகவல்கள் மூலம் அனுப்பப்படும். டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon