Published : 28 Nov 2017 10:02 AM
Last Updated : 28 Nov 2017 10:02 AM
பிரிஸ்பன் தோல்விக்குப் பிறகு நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தைக் காப்பாற்றும் ஒரே மீட்பர் பென் ஸ்டோக்ஸ் என்ற கருத்து ரசிகார்களிடையே பெரிதும் பரவியுள்ள நிலையில், நேற்று லண்டன் விமானநிலையத்தில் பென் ஸ்டோக்ஸ் இருப்பதான புகைப்படம் ஆஷஸுக்குத்தான் அவர் செல்கிறார் என்ற ஊகங்களையும், ஆர்வங்களையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது.
லண்டன் ஹீத்ரூ விமானநிலையத்தில் பென்ஸ்டோக்ஸ் பெட்டி படுக்கையுடன் புறப்படத் தயாராகும் புகைப்படம் ஒருவேளை பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை மீட்க ஆஷஸ் தொடருக்குத்தான் செல்கிறாரோ என்ற ஆர்வத்தைக் கிளப்ப சமூகவலைத்தளத்தில் இந்தப் புகைப்படம் வைரலானது.
ஆனால், அவர் குடும்பத்தினரைப் பார்க்க நியூஸிலாந்து செல்கிறார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தச் சூட்டில் குளிர்ந்த நீரைத் தெளித்தது.
இந்நிலையில் நியூஸிலாந்தில் கேண்டர்பரிக்கு முதல் தர கிரிக்கெட்டில் ஆட பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்து புறப்பட்டதாக செய்தி எழுந்தது.
கேண்டர்பரி கிரிக்கெட் சங்கமும் இதனை உறுதி செய்துள்ளது. பிரிஸ்டலில் இரவு விடுதி அடிதடிக்குப் பிறகே உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடத் தடையில்லை என்பதால் கேண்டர்பரி கிரிக்கெட் அணிக்கு ஆடலாம் என்று அவர் முடிவெடுத்தார்.
பிரிஸ்பன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததையடுத்து பென் ஸ்டோக்ஸ் மீதான ஏக்கம் இங்கிலாந்து ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
ஒழுக்க நிலைப்பாடுகளுக்காக ஆஷஸ் தொடரிலிருந்து பென் ஸ்டோக்சை நீக்கி இங்கிலாந்து எடுத்த முடிவு இங்கிலாந்தைப் பாதித்துள்ளதாக பார்க்கப்படுகிறது, ஏற்கெனவே ஸ்டீவ் வாஹ், இயன் சாப்பல் போன்றவர்கள் பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஸ்டோக்ஸ் நியூஸிலாந்தில் பிறந்தவர், இவரது தந்தை ஜெரார்ட் முன்னாள் ரக்பி சர்வதேச பயிற்சியாளர் ஆவார், இவர் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்ததையடுத்து சிறுபிராயத்திலேயே ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு வந்து விட்டார்.
இங்கிலாந்தில் பெரும்பகுதி வாழந்த பிறகு பெற்றோர் கிறைஸ்சர்ச்சுக்குச் சென்று விட்டனர்.
இந்நிலையில் ஆஷஸ் தொடருக்குத்தான் பென் ஸ்டோக்ஸ் செல்கிறார் என்று ரசிகர்களிடையே எழுந்த ஆர்வத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடித்து வைத்துள்ளது.
“பென் ஸ்டோக்ஸ் தன் சொந்த பயணமாக நியூஸிலாந்து செல்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று அறிக்கையில் இசிபி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT