Published : 15 Aug 2023 06:44 AM
Last Updated : 15 Aug 2023 06:44 AM
லாடர்ஹில்: மேற்கு இந்தியத் தீவுகள் - இந்தியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில்லில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக 45 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 61 ரன்களும், திலக் வா்மா 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் சேர்த்தனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5, ஷுப்மன் கில் 9, சஞ்சு சாம்சன் 13, ஹர்திக் பாண்டியா 14, அக்சர் படேல் 13, அர்ஷ்தீப் சிங் 1, குல்தீப் யாதவ் 0 ரன்களுக்கு நடையைக் கட்டினர். யுவேந்திர சஹல் 0, முகேஷ் குமாா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் பந்துவீச்சில் ரொமேரியோ ஷெப்பர்ட் 4, அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 2, ராஸ்டன் சேஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
166 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரண்டன் கிங் 55 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிக்கோலஸ் பூரன் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 47 ரன்கள் சேர்த்தார். ஷாய் ஹோப் 22, கைல் மேயர்ஸ் 10 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், திலக் வா்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனா்.
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி டி20 கிரிக்கெட் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்தியாவுக்கான டி20 கிரிக்கெட் தொடரை அந்த அணி 2016-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் வென்றுள்ளது. அதேவேளையில் இந்திய அணி தொடர்ச்சியாக 12, இருதரப்பு டி20 தொடர்களில் தோல்வியை சந்திக்காத நிலையில் தற்போது தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
தோல்விக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
கடைசி 10 ஓவர்களில் நாங்கள் உத்வேகத்தை இழந்தோம். நான் களமிறங்கியது முதல் ரன்கள் சேர்க்க முடியவில்லை. நேரம் எடுத்துக்கொண்ட போதிலும் சிறப்பாக முடிக்க முடியாமல் போனது. ஒரு குழுவாக எங்களுக்கு நாங்களே சவால் விடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான்நம்புகிறேன். இந்த ஆட்டங்கள் அனைத்தும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை. ஒன்றிரண்டு தொடர்களை இங்கொன்றும், அங்கொன்றுமாக இழப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் நோக்கத்துக்கான அர்ப்பணிப்பு முக்கியமானது.
ஒருநாள் கிரிகெட் போட்டி உலகக் கோப்பை வரவிருக்கிறது. சில சமயங்களில் தோல்வியடைவது நல்லது. நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றி மற்றும் தோல்வி செயல்முறையின் ஒரு பகுதியாகும். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். பந்து வீச்சில் செய்யும் மாற்றங்கள் என்பது அந்த தருணத்தில் என் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதையே தான் மேற்கொள்வேன். நான் அதிகம் திட்டமிடுவதில்லை.
இவர் அவர் கூறினார்.
‘இறுதிகட்டத்தில் அதிரடி தேவை’ - திராவிட்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறும்போது, “இந்திய அணியில் மாற்றம் செய்வதற்கான தேவை ஏற்படவில்லை என்றே நினைக்கிறேன். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நிலைத்து நின்று விளையாடி ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் வீரர்களை அடையாளம் காண வேண்டும். இந்த விஷயம் சவாலானதாக இருக்கிறது. அணியில் பந்துவீச்சாளர்களை குறைத்தும் விளையாட முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT