Published : 06 Jul 2014 12:15 PM
Last Updated : 06 Jul 2014 12:15 PM
உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியின் அச்சுறுத்தலை முறியடித்து, அர்ஜென்டீனா அரையிறுதிக்கு முன்னேறியது.
பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அர்ஜென்டீனா பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜென்டீனாவின் ஸ்ட்ரைக்கர் கொன்சாலோ ஹிகுவே துவக்க நிமிடங்களில் அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.
இந்த வெற்றி மூலம் 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அர்ஜென்டீனா உலகக் கோப்பை அரயிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அர்ஜென்டீனா அணிக்கு இடைவேளைக்கு முன் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் துவக்க நிமிடங்களில் தன்னுடைய அதிவேக ஆட்டத்தினால் பெல்ஜியத்தைக் கதி கலக்கிய ஆஞ்செல் டி மரியோ காயம்பட்டு வெளியேறினார்.
நெய்மார் காயமடைந்து இந்த உலகக் கோப்பை போட்டிகளில் மேலும் விளையாட முடியாதுபோயுள்ள நிலையிலும், மற்றொரு அபாரமான வீரரான கொலம்பியாவின் ரோட்ரிகஸிற்கும் இனி வாய்ப்பில்லை என்ற நிலையில், மெஸ்ஸி இந்த உலகக் கோப்பை நமக்கே என்று நினைத்திருப்பார்.
அவரது ஆட்டம் அவ்வாறுதான் அமைந்தது. அவர் பாம்பு போல் நெளிந்து வளைந்து பந்துகளை பெல்ஜியம் வீரர்களைத் தாண்டி எடுத்துச் சென்றது, எடுத்து செல்ல முடியாது பெல்ஜியம் வீரர்கள் புடைசூழும்போது சாதுரியமாக அடுத்தவர்களுக்கு பாஸ் செய்வது என்று மெஸ்ஸி நேற்றும் வெற்றியில் ஒரு உந்து சக்தியாகச் செயல்பட்டார். மேலும் தனது 91-வது போட்டியில் நேற்று ஆடிய மெஸ்ஸி, மரடோனா சாதனையை சமன் செய்தார். மரடோனா அர்ஜென்டீனாவுக்காக 91 ஆட்டங்களில் ஆடியுள்ளார்.
பெல்ஜியம் ஆட்டத்தை ஆடிய விதத்திற்கு உதாரணமாக, அந்த நாட்டின் நட்சத்திர வீரர் ஈடென் ஹசார்ட் ஆடிய விதமே சான்று. அர்ஜென்டீன வீரர் லூகாஸ் பிக்ளியாவை அவர் மோசமாக ஃபவுல் செய்து புக் செய்யப்பட்டார். உடனே உள்ளே அழைக்கப்பட்ட அவருக்குப் பதிலாக நேசர் சாட்லி களமிறக்கப்பட்டார்.
சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போராட்ட வெற்றிக்குப் பிறகு 3 வீரர்களை புதிதாக களமிறக்கியது அர்ஜென்டீனா, ஜோஸ் மர்யா, பாசண்டா, மார்டின் டெமிசெலிஸ், பிக்ளியா ஆகியோர் களமிறங்கினர்.
ஆட்டத்தின் துவக்க நிமிடங்களிலேயே இவர்கள் பெல்ஜியத்தை அச்சுறுத்தத் தொடங்கினர். மெஸ்ஸி முன்களத்தில் இருந்தார். அவர் இசகியல் லாவெஸிக்கு ஒரு தாழ்வான ஷாட்டை பாஸ் செய்ய அது கோல் நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட அதனை வின்சென்ட் கொம்பெனி கிளியர் செய்தார்.
அர்ஜென்டீனாவின் வெற்றி கோல்:
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சென்டர் பேக் நிலையிலிருந்த வீரர் பந்தைத் தன் கட்டுப்பாட்டிலிருந்து இழந்தார், மச்செரானோ பந்தை மெஸ்ஸிக்குப் பாஸ் செய்தார். மெஸ்ஸி உடனே உத்வேகம் பெற்று பெல்ஜியம் வீரர்களான டி புருய்ன் ஃபெல்லாய்னி ஆகியோருக்குப் போக்கு காட்டி ஆஞ்செல் டி மரியாவுக்குப் பாஸ் செய்தார். அந்த பாஸ் கூட அச்சுறுத்தல் அல்ல, அந்தப் பந்து பெல்ஜியம் வீரர் ஜேன் வெர்டோங்கெனின் வலது காலில் பட்டு தன் பாட்டுக்கு நின்று கொண்டிருந்த ஹிகுவே வழியில் வர அவர் அதனை அபாரமான முறையில் கோலாக மாற்றினார்.
முடங்கிப் போன பெல்ஜியம்:
மெஸ்ஸியின் மீத் கவனம் செலுத்தி அவரைத் தடுக்கவே 3 வீரர்களை நியமித்தது பெல்ஜியம் அணியின் ஆட்டத்தை மந்தப்படுத்தியது.
கெவின் டி புருய்ன் ஒரு முறை 25 அடியிலிருந்து ஒரு ஷாட்டை கோலை நோக்கி அடிக்க அதனை ரொமீரோ எளிதில் பிடித்துவிட்டார்.
பிறகு கெவின் மிரலாஸ், வேர்டோங்கென் செய்த பாஸை தலையால் அடிக்க அது கோலுக்கு மிக அருகே வெளியே சென்றது.
இடைவேளைக்குப் பிறகும் பெல்ஜியத்தின் ஆட்டத்தில் பெரிய மற்றங்கள் இல்லை.
மாறாக ஹிகுவே இரண்டாவது கோலை அடித்திருப்பார். அந்த முயஸியை டேனியல் வான் பியூட்டன் முறியடித்தார். இன்னொரு முறை ஹிகுவே அடித்த ஷாட் கோல் மேல் கம்பத்தில்பட்டது.
அன்று போலவே ரொமிலு லுகாகு வந்த பிறகு பெல்ஜியம் சற்றே உத்வேகம் காட்டியது. ஆனால் அதன் முயற்சிகள் பலனளிக்கும் விதமாக அமையவில்லை.
மாறாக ஆட்டம் முடியும் தறுவாயில் மெஸ்ஸி தனது 5வது கோலை அடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்த முயற்சியை தீபோ கோர்டாய்ஸ் முறியடித்தார்.
ஜெர்மனி, பிரேஸில் அணிகளுடன் அர்ஜென்டீனா அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் பென்லாடி ஷூட் அவுட்டில் நெதர்லாந்து கோஸ்டா ரிகாவை வெளியேற்றியதால் அர்ஜென்டீனா, நெதர்லாந்து அரையிறுதியில் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT