Published : 12 Aug 2023 02:33 PM
Last Updated : 12 Aug 2023 02:33 PM

இங்கிலாந்து கவுண்ட்டியில் மாங்கு மாங்கென்று சதமெடுத்தாலும் புஜாராவை சீந்துவாரில்லை - காலக்கொடுமை

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன் டே கோப்பை ஒருநாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக ஆடி வரும் இந்திய அணியிலிருந்து புறமொதுக்கப்பட்ட புஜாரா நேற்று சோமர்செட் அணிக்கு எதிராக 113 பந்துகளில் 117 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல், 318 ரன்களை வெற்றிகரமாக விரட்டி வெற்றி பெறச் செய்துள்ளார்.

113 பந்துகளில் 117 ரன்களை 11 பவுண்டரிகளுடன் எடுத்த புஜாரா மீண்டும் மீண்டும் இங்கிலாந்து மண்ணில் கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் சதங்களை அடித்து வருகிறார். ஆனால் பிசிசிஐ அணித்தேர்வுக்குழுவோ, இந்திய பயிற்சியாளர்களோ, கேப்டன்களோ யாரும் புஜாராவை சீந்துவதில்லை. இங்கிலாந்து அணி கூட அவரைத் தேர்ந்தெடுத்து விடும். ஆனால் இந்திய அணியில் அவர் நுழைய முடியாது என்ற நிலையினால் யாருக்கு நட்டம் என்பதை பிசிசிஐ சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று ஆளில்லாமல் வீரர்களை காயங்களுக்குப் பறிகொடுத்துவிட்டு உலகக்கோப்பையில் 4ம் நிலையில் இறங்க ராகுல் வருவாரா, ஸ்ரேயஸ் அய்யர் வருவாரா என்று திண்டாடி வருகின்றோம். ஏன் இந்த நிலை. அனுபவசாலியான புஜாராவை இப்போது நடைபெறும் ஒரு சில போட்டிகளில் 4ம் நிலையில் இறக்கி சோதனை செய்து பார்க்கலாமே. வந்தால் நல்லது வராவிட்டால் வேறு வீரர் என்று திறந்த மனநிலையைக் கைகொள்ள மறுக்கிறது பிசிசிஐ அணித்தேர்வுக் குழு.

இப்போது ஒருநாள் அணியில் ஆடும் வீரர்கள் அதாவது சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரை விடவும் புஜாரா என்ன மோசமான பிளேயரா என்ற கேள்வி எழுகின்றது. ஒரு புறம் ரஞ்சியில் சதமாக அடித்து நொறுக்கும் சர்பராஸ் கானை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்ய தொடர்ந்து மறுப்பது அதற்கு அவர் ஃபிட்னெஸ் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை அவிழ்த்து விடுவது மறுபுறம் இங்கிலாந்து கவுண்ட்டியில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் எடுத்துவரும் புஜாராவை மருந்துக்குக் கூட இந்திய ஒருநாள் அணியில் எடுக்காமல் புறக்கணிப்பது. இது என்ன போக்கு? சந்தானம் ஒரு படக் காமெடியில் கேட்பாரே, “அப்படி என்ன இவங்கள்ளாம் பெரிய தில்லாலங்கடியா?” என்று அப்படித்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.

நேற்று சோமர்செட் அணி 318 ரன்களைக் குவித்தது. சேஸ் செய்யும் போது சசெக்ஸ் அணி 47/2 என்று தடுமாறியது. டாம் அல்சாப் (60) என்பவருடன் புஜாரா இணைந்தார். இருவரும் சேர்ந்து 15 ஓவர்களில் 92 ரன்களைச் சேர்த்தனர். அல்சாப் 60 ரன்களில் எட்ஜ் கேட்ச் ஆகி வெளியேறினார். புஜாரா 49 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். புஜாராவின் இன்னிங்ஸின் சிறப்பம்சம் என்னவெனில் மிடில் ஓவர்களில் பீல்ட் பரவலான பிறகு இடைவெளிகளில் பந்தை அடித்து ஒன்று இரண்டு என்று ஸ்ட்ரைக்கை பிரமாதமாக ரொடேட் செய்ததுதான். இப்போதைய இந்திய ஒருநாள் அணியில் இதற்குத்தான் ஆளில்லை.

புஜாரா ஒருமுனையில் நிற்க மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்து சசெக்ஸ் அணி 34 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்களை எடுத்திருந்தது. அதிலிருந்து ரிஸ்கே எடுக்காமல் ஆடி புஜாரா 105 பந்துகளில் சதம் கண்டார். இது புஜாராவின் 16வது ஒருநாள் லிஸ்ட் ஏ சதமாகும். ஆலி கார்டர் என்பவர் இறங்கி 34 பந்துகளில் 4 பவுண்டை 2 சிக்சர்களுடன் 44 ரன்கள் வெளுத்து வாங்கி ஆட்டமிழந்தார். ஃபின் ஹட்சன் பிரெண்டிஸ் 13, ஜாக் கார்சன் 20 என்று அதிரடிப் பங்களிப்புகளை செய்ய புஜாரா 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 48.1 ஓவர்களில் 319/6 என்று சசெக்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார்.

உலகக்கோப்பைக்கு முன் ஷிகர் தவான், புஜாரா ஆகியோருக்கு ஆசியக் கோப்பை உள்ளிட்டவற்றில் வாய்ப்புகளைக் கொடுத்து அனுபவத்தை முன்னிறுத்தி உலகக்கோப்பையில் இறங்க நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது, பயன்படுத்திக் கொள்வார்களா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x