Last Updated : 12 Aug, 2023 06:05 AM

 

Published : 12 Aug 2023 06:05 AM
Last Updated : 12 Aug 2023 06:05 AM

கேமராவுடன் பேசுவேன்... கொக்கு போல் காத்திருப்பேன்… - விளையாட்டுத்துறை போட்டோகிராபியின் சவால் பகிரும் எல்.ராமச்சந்திரன்

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. களத்தில் வீரர்கள் எந்த அளவுக்கு பரபரப்பாக இருந்தார்களோ அதற்கு மேல் சுழன்று கொண்டிருந்தார் சர்வதேச புகைப்பட கலைஞரான எல்.ராமச்சந்திரன். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், பிளேபாய், மாக்சிம் போன்ற இதழ்களில் பணியாற்றி உள்ளார்.

புகைப்படம் தொடர்பாக 4 புத்தகங்களை எழுதியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. 2019 -ம் ஆண்டில், நான்கு மணி நேரத்தில் அதிக முகங்களை வரைந்ததற்காக அவர் தனது குழுவுடன் கின்னஸ் உலக சாதனையும் படைத்திருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர். அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘தி ஆர்ட்டிஸ்ட்’ என்ற தலைப்பில் வெளிட்ட தொகுப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

பேஷன் போட்டோ கிராபி, ஆர்ட் போட்டோ கிராபி, கட்டிடக்கலை போட்டோ கிராபி, செலிபிரிட்டி போட்டோ கிராபி, கிளாமர் போட்டோ கிராபி என பல துறைகளில் பயணித்து வந்த எல்.ராமச்சந்திரன், தற்போது விளையாட்டுத்துறை போட்டோ கிராபியிலும் பிரகாசிக்க தொடங்கி உள்ளார். ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மின்னல் வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்த அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை...

பொதுவாகவே போட்டோ கிராபியில் இன்றைய நிலையில் பலவிதமான வகை வந்துவிட்டது. விளையாட்டுத்துறையிலும் அந்த நிலையேஉள்ளது. போட்டோ கிராபியில் எல்லாவற்றுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பேஃஷன் போட்டோகிராபி என்றால் இன்டோர், அவுட்டோர் எனஷாட் பிரித்து எடுப்போம். லைட்டிங் மிகவும் முக்கியம். அதேபோன்று மேக்கப், மெட்டீரியல் முக்கியம்.

காஸ்ட்யூம் முக்கியம். நம்முடன் பணிபுரியும் பிரபலம் எந்த அளவு ஈடுபாட்டுடன் பணிபுரிகிறார் என்பதும் முக்கியம். ஒவ்வொரு போட்டோகிராபிக்கும் ஏதோ பொருள் ஒன்று அழகு சேர்க்கும். பொதுவான போட்டோ கிராபி, செலிபிரிட்டி போட்டோ கிராபி, பேஷன் போட்டோ கிராபி, வைல்டு லைஃப் போட்டோ கிராபி ஆகியவற்றை தாண்டி விளையாட்டு போட்டோ கிராபிக்கு முக்கியமானது ஷட்டர்தான். ஷட்டர் வழியாக ஒளி புகும் நேரம்தான் முக்கியம்.

ஏனெனில் விளையாட்டில் அனைத்தும் நகர்வில் இருக்கும். கோல் அடிக்கும் வேகம் மின்னல் போன்று இருக்கும். அந்த வேகத்தை ஷட்டர்தான் கட்டுப்படுத்தும். விளையாட்டு போட்டோகிராபியை பொறுத்தவரை நாம் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவையும் நிதானமாக நிறுத்தி ஒரு லைனில் கொண்டுவர வேண்டுமென்றால் நம்முடைய கண்களை வீரர்களை நோக்கி இருக்க வேண்டும். கவனச்சிதறல்கள் இருக்கக்கூடாது.

உதாரணமாக செஸ் ஒலிம்பியாட் எடுத்தோம். அங்கு வீரர்கள் தலையில் கையை வைத்துக்கொண்டு கண்களை லட்சம் முறை நகர்த்துவார்கள். அவர்களை நாம் நேராக படம் எடுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் கிட்டத்தட்ட தங்களை முகத்தை இருபுறமும் கைகளால் மறைத்து இருப்பார்கள். மேலும் அங்குள்ள லைட்டிங், அவர்களது கண்களில் நிழல்களை உருவாக்கிவிடும். அதற்கு ஒரு பொசிஷன் தேவைப்படும்.

அப்போது லோ அங்கிள் வைத்து எடுப்போம். இங்கு எஃப் பாயிண்டுடன் ஷட்டர் முக்கிய பங்குவகிக்கும். வீரர்கள் டேபிளில் அமர்ந்து இருப்பார்கள் என்பதால் அவர்களை முழுமையாக படம் எடுக்க முடியாது. ¾ல் ஆங்கிளில்தான் கிளிக் செய்யமுடியும். அவர்களது சிந்தனையின் அழகு, தெளிவை நாம் போட்டோகிராபியில் பிரதிபலிக்க செய்ய முடியும். இது எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. செஸ் போட்டியை பொறுத்தவரையில் வீரர்களுக்கும், அவர்கள் நகர்த்தும் காய்களுக்கும் இடையே ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்கும். அதை நாம், சரியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியும் நல்ல அனுபவத்தை கொடுத்தது. இந்த விளையாட்டில் வீரர்கள் 100 கி.மீட்டர் வேகத்தில் பந்தை அடிக்கிறார்கள். தலை, கை, கால்களும் நகர்வில் இருந்து கொண்டே இருக்கும். இந்த தருணங்களை கிளிக் செய்ய வேண்டுமென்றால் அவர்களுடைய எண்ண ஓட்டத்தில் நாமும் இருக்க வேண்டும். அவர்களுடைய வேகத்துக்கு நாமும் செயல்பட வேண்டும். ஆயிரம் கிளிக் செய்தாலும் ஒரு நல்ல படத்தை எடுத்துவிட முடியாது.

ஆனால் அற்புதமான தருணத்துக்காக ஒருபடத்தை நிதானமாக, நிறுத்தி கண்களை வியூபாயிண்டில் வைத்து கை கிளிக் செய்யகாத்திருக்க வேண்டும்.தண்ணீரில் கொக்குதனது இரைக்காக ஒற்றைக் காலில் காத்திருப்பது போல், இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் பூரணமாக கிடைக்கும். இதுபோன்ற சில நுணுக்கங்களை விளையாட்டுத் துறை புகைப்படங்களை எடுக்கும் போது கற்றுக்கொண்டேன். முதல்வர் கோப்பையில் பலவிதமான போட்டிகள் இருந்தன. ஒரு மாதகாலம் இந்த திருவிழா நடைபெற்றது. ஒரே நேரத்தில் பலவிதமான விளையாட்டு போட்டிகளை கிளிக் செய்தது சவால்தான்.

ஆனால் ஏற்கெனவே பலதுறைகளில் பயணித்ததால் விளையாட்டுத்துறை போட்டோ கிராபி என்பது பெரிய அளவிலான சவாலாக தெரியவில்லை. ஒவ்வொரு துறையிலும் ‘டெப்த் ஆப் பீல்டு’ என்பது முக்கியம். போட்டா கிராபி துறையிலும் எந்தெந்த போட்டோவுக்கு என்ன விஷயங்கள் தேவை என்பதை ஆழமாகவும், அழகாகவும், தெளிவாகவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி சென்று கொண்டிருக்கிறது.

இங்கு ஆடுகளம் முக்கியம். இது ஆக் ஷன்போட்டோ கிராபியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும், எதிரணி வீரருக்கும் உள்ள போராட்டத்தை கிளிக்கில் கொண்டுவருவது எளிதல்ல. கண்களை நகர்த்தாமல் வியூ பாயிண்டில் கவனம் செலுத்தி கிளிக் செய்தால் மட்டுமே ஒரு சில படங்கள் கிடைக்கும். இது சவாலாக இருந்தது. விளையாட்டு துறை பயணங்களால் இனிமேல் எந்தவித விளையாட்டாக இருந்தாலும் நம்மால் நேர்த்தியாக கிளிக் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. இதற்கு காரணம் நான் கடந்து வந்த பாதைதான்.

விளையாட்டு துறையில் போட்டோ எடுக்கும் போது நான், கேமராவிடம் பேசுவது ஒன்றே ஒன்றுதான். நான் உன்னால், எதிரே இருக் கும்நபரை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும். அதற்கு நல்ல போட்டோ கிடைக்கும் என்றுகூறியபடிதான் கேமரா மேல் கை வைப்பேன். அப்போது எனக்கும் கேமராவுக்கும் மனநிலைஒன்றிவிடும். இதே மனநிலையை எதிரேஇருக்கும் விளையாட்டு வீரரிடம் சொல்லாமல்தான் சொல்வோம்.

இந்த இடத்தில் இந்த படத்தை கிளிக் செய்யப் போகிறேன் எனக்கூறியபடி அதற்காக காத்திருப்பேன். அப்போது சவாலை எதிர்கொள்ளலாம். எனது எண்ணமும், விளையாடும் வீரரின் எண்ணமும் ஒன்றிணைந்தால் மட்டுமே சிறப்பான கிளிக் கிடைக்கும். இது எளிதல்ல. அறிவுசார்ந்த விஷயம். நேர்த்தியாக எடுக்கும்போதுதான் சிறந்த ஆக் ஷன் கிளிக் கிடைக்கும். உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றுதான் போட்டோ கிராபருக்கு கேமராவும். நாம் அதை அந்த அளவுக்கு நேசிக்க வேண்டும். எதை நேசிக்கிறோமோ, அதுதான் நம்மை வந்து சேரும் என்கிறார் சாதனையாளர் எல்.ராமச்சந்திரன்.

உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ, அதுபோன்றுதான் போட்டோ கிராபருக்கு கேமராவும். நாம் அதை அந்த அளவுக்கு நேசிக்க வேண்டும். எதை நேசிக்கிறோமோ, அதுதான் நம்மை வந்து சேரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x