Published : 11 Aug 2023 06:49 AM
Last Updated : 11 Aug 2023 06:49 AM
மும்பை: உலகக் கோப்பையை தட்டில் வைத்துப் பெற முடியாது, சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும், இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் மன உறுதியுடனும், தன்நம்பிக்கையுடனும் உள்ளோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடர்களில் பட்டம் வென்று 10 வருடங்கள் ஆகிறது. கடைசியாக இந்திய அணி 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது கிடையாது. உலகக் கோப்பையை வெல்வது என்பது மிகப் பெரிய கனவு. அதற்காக போராடுவதை காட்டிலும் வேறு விஷயங்கள் எதுவும் மகிழ்ச்சியை தரப் போவதில்லை. உலகக் கோப்பையை தட்டில் வைத்துப் பெற முடியாது, கடுமையாக உழைக்க வேண்டும். இதைத்தான் 2011 முதல் இப்போது வரை நாங்கள் அனைவரும் செய்து வருகிறோம், அதற்காக அனைவரும் போராடுகிறோம்.
இந்திய வீரர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறார்கள், ஏனென்றால் எங்களிடம் ஒரு நல்ல அணி உள்ளது. நாங்கள் அனைவரும் சிறந்த வீரர்கள். எங்களால் அதைச் செய்ய முடியும் என்ற மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை உள்ளது. அது நடக்கவில்லை என்றால், நாங்கள் தொடரை சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்று அர்த்தமல்ல. 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையை இழந்தபோது, அடுத்த உலகக் கோப்பைக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினேன்.
நான் ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு முதலில் பங்களிப்பை வழங்க வேண்டும். கேப்டன் பொறுப்பு 2-வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக பேட்ஸ்மேனாக பெரிய அளவில் ரன்கள் சேர்த்து அணிக்கு வெற்றி தேடி கொடுக்க வேண்டும். கடந்த முறை டி 20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்ற போது, முன்னணி வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டோம். தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கிறோம்.
பிசிசிஐ உடன் ஆலோசனை: எல்லா போட்டிகளிலும் விளையாடிஉலகக் கோப்பை தொடருக்கு தயாராக முடியாது. இதை நாங்கள் இரு வருடங்களுக்கு முன்னரே தீர்மானித்துவிட்டோம். டி20 ஆட்டங்களில் விளையாடாத விஷயத்தில் என் மீதும், விராட் கோலி மீது மட்டும் கவனம் குவிக்கப்படுகிறது. ஜடேஜாவும் விளையாடவில்லை. இது உலகக் கோப்பை வருடம்.
நாங்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்புகிறோம். ஏற்கெனவே அணியில் பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். காயங்களை கண்டு பயப்படுகிறேன். வீரர்களின் பணிச்சுமை தொடர்பாக பிசிசிஐ உடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் ஓய்வு வழங்குகிறோம். இதனை சுழற்சி முறையில் மேற்கொள்கிறோம். பெரிய அளவிலான தொடரை யாரும் தவறவிடுவதை நாங்கள் விரும்பவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் முக்கிய வீரர்கள் சில பெரிய நிகழ்வுகளைத் தவறவிட்டனர். இம்முறை நாங்கள் அதை விரும்பவில்லை. இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT