Published : 11 Aug 2023 07:02 AM
Last Updated : 11 Aug 2023 07:02 AM
சென்னை: 12 அணிகள் கலந்துகொள்ளும் புச்சிபாபு அகில இந்திய கிரிக்கெட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது. முதன்முறையாக இந்த தொடர் சென்னைக்கு வெளியே நடத்தப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் உலகக் கோப்பை தொடருக்காக தயார் செய்யப்பட்டு வருவதால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரை டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஞ்சி கோப்பை தொடரை போன்று புச்சிபாபு தொடரின் ஆட்டங்களும் 4 நாட்கள் நடைபெறும்.
இந்த தொடரில் டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன், இந்தியன் ரயில்வே, பரோடா, ஹரியாணா, மும்பை, டெல்லி, கேரளா, திரிபுரா, மத்தியபிரதேசம், பெங்கால், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 12 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் செப்டம்பர் 2 முதல் 5-ம் தேதி வரையும் சேலம் மற்றும் திண்டுக்கலில் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டி செப்டம்பர் 8 முதல் 11-ம் தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்த தொடருக்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கே.ஸ்ரீகாந்த், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், டேக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஹெச்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT