Published : 10 Aug 2023 08:24 AM
Last Updated : 10 Aug 2023 08:24 AM

ODI WC 2023 | இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு ஆகஸ்ட் 31-ல் டிக்கெட் விற்பனை

கோப்புப்படம்

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் வாங்க விரும்புபவர்கள் www.icc-cricket.com என்ற இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 25-ம் தேதி இந்தியா பங்கேற்காத பயிற்சி போட்டிக்கான டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ஆகஸ்ட் 30-ம் தேதி இந்திய அணி குவாஹாட்டி, திருவனந்தபுரத்தில் விளையாடும் 2 பயிற்சி ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 31-ம் தேதி முதற்கட்டமாக இந்திய அணி மோதும் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதில் சென்னையில் அக். 9-ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம், டெல்லியில் அக். 11-ம் தேதி இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம், புனேவில் அக். 19-ம் தேதி இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டங்கள் அடங்கும்.

2-வது கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி இந்திய அணி பங்கேற்கும் 3 ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. இதில் தரம்சாலாவில் அக். 22-ல் இந்தியா - நியூஸி. மோதும் ஆட்டம், லக்னோவில் 29-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக மோதும் ஆட்டம், மும்பையில் நவ. 2-ம் தேதி இலங்கைக்கு எதிராக மோதும் ஆட்டம் ஆகியவை அடங்கும்.

செப்டம்பர் 2-ம் தேதி 3-வது கட்ட டிக்கெட் விற்பனை நடைபெறும். இதில் கொல்கத்தாவில் நவம்பர் 5-ம் தேதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம், பெங்களூருவில் நவம்பர் 12-ம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா மோதும் ஆட்டம் அடங்கும். அகமதாபாத்தில் அக். 14-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. செப்டம்பர் 15-ம் தேதி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x