Published : 25 Apr 2014 09:06 PM
Last Updated : 25 Apr 2014 09:06 PM
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரைத்துள்ளது.
இதுபற்றி பிசிசிஐ-ன் பொது மேலாளர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், "ஆம், அஸ்வின் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 30-தேதி பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள். வேறெந்த கிரிக்கெட் வீரரும் எங்கள் பரிந்துரைப் பட்டியலில் இல்லை" என்றார்.
கிரிக்கெட் வாரியத்தின், 2012-13-ஆம் ஆண்டிற்கான பாலி உம்ரிகர் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அஸ்வின் வென்றுள்ளார். சென்ற வருடம் நவம்பர் மாதம் மும்பையில் தனது 19-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், கடந்த 80 வருடங்களில் அதிவேகமாக நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதன் மூலம் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் எர்ராபள்ளி பிரசன்னாவின் சாதனையை அஸ்வின் முந்தினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 106 விக்கெடுகளையும் (79 போட்டிகள்) , டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் (79 போட்டிகள்) வீழ்த்தியுள்ளார்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்து வருகிறது. இதுவரை 46 கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சென்ற வருடம், இந்திய வீரர் விராட் கோலி அர்ஜூனா விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT