Published : 07 Aug 2023 07:11 PM
Last Updated : 07 Aug 2023 07:11 PM
கராச்சி: இங்கிலாந்தின் பாஸ்பால் ஆக்ரோஷ அணுகுமுறை பார்ப்பதற்கு த்ரில்லிங் ஆக இருக்கிறது என்று பாராட்டிய பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி, சமீபத்தில் ஓய்வு பெற்ற ஸ்டூவர்ட் பிராடின் 600 விக்கெட்டுகள் சாதனையை விதந்து புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்தான் மிகச்சிறந்த வடிவம் என்று கூறும் ஷாஹின் அப்ரீடி, பிராடை ‘பெரிய லெஜண்ட்’ என்று புகழ்ந்தார். இங்கிலாந்து சமீபத்தில் ஆடிவரும் ஆக்ரோஷமான ஆட்ட முறை பாகிஸ்தான் கிரிக்கெட்டையே தூண்டி விட்டுள்ளது. அவர்கள் ஆட்டம் பெரிய கிரியா ஊக்கியாக உள்ளது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் ஷாஹின் அஃப்ரீடி.
“அன்று பிராட் பந்து வீச்சையும் அவர் ஓய்வு பெறும் அறிவிப்பையும் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்தான் மிகச்சிறந்த வடிவம். பிராட் எவ்வளவு பெரிய லெஜண்ட். டெஸ்ட் கிரிக்கெட்டில் 600க்கும் கூடுதலாக விக்கெட் எடுப்பதெல்லாம் என்னைப்பொறுத்தவரை கனவில்தான் நிறைவேறும். டெஸ்ட் கிரிக்கெட் என் உடல் தகுதியை சரியாக வைத்திருக்க உதவுகிறது, நான் டி20, ஒருநாள் போட்டிகளில் திறம்பட ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதால்தான்.
ஆஷஸ் தொடர் போட்டிகளைப் பார்த்தது மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கையில் ஆடியதையும் பார்த்திருப்பீர்கள். நாங்களும் பேட்டிங்கில் இங்கிலாந்து போலவே தாக்குதல் ஆட்டம் ஆடினோம். தொடர்ந்து ஆடுவோம். வேகமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் எனக்குப் பிடித்தமானது.
ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டு எடுக்க வேண்டும் என்றே வீசுகிறேன். குறைந்த ஓவர் வடிவம் இப்போது பிரபலமாகி வரும் தி ஹண்ட்ரட் போன்ற தொடர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எதிரணியை முடக்கும் ஒரே வழி. நான் ஓடிவந்து என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து வீசுகிறேன். அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்துவதே என் ஒரே குறிக்கோள், நோக்கம்.
இந்த விதத்தில் எந்த கிரிக்கெட்டும் எனக்கு சோர்வை அளிக்காது என்பதுதான் என் உற்சாகப் பயணத்திற்குக் காரணம்” என்கிறார் ஷாஹின் அஃப்ரீடி.
ஸ்டூவர்ட் பிராடை இவர் லெஜண்ட் என்று வர்ணிக்க ஸ்டூவர்ட் பிராட் சமீபத்தில் ஷாஹின் அஃப்ரீடியைப் புகழ்ந்து கூறும்போது, “உலகில் நான் விரும்பிப் பார்க்கும் பவுலர்களில் ஒருவர் ஷாஹின் அஃப்ரீடி. அவர் ஓடி வரும்போது ஒரு பெரிய நிகழ்வாக எனக்குத் தெரிகிறது. ஆற்றலுடனும் அதிர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஓடி வந்து வீசுபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நான் ஷாஹின் அஃப்ரீடியின் பவுலிங்கை ரசித்துப் பார்ப்பவன்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT