Published : 07 Aug 2023 12:34 PM
Last Updated : 07 Aug 2023 12:34 PM
கயானா: புராவிடன்ஸில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி, இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது. அதாவது 2016-க்குப் பிறகு மே.இ.தீவுகள் டி20-யில் இந்திய அணியை முதல் 2 போட்டிகளில் தோற்கடித்து 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இதற்கு முழு பொறுப்பு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி என்று கூறுவது வன்மமோ மிகையோ அற்ற விமர்சனம் என்றே கருத வேண்டியுள்ளது. இருமுறை சஹல், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுக்கிறார். இருமுறையும் அவருக்கு அடுத்த ஓவர் கொடுக்கப்படவில்லை. தவறை திருத்திக் கொள்ள வேண்டிய கேப்டன் செய்த தவறையே மற்றொரு முறை செய்கிறார் என்றால் அதன் பொருள்தான் ‘மேட்டிமைத்தனம்’.
153 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய மே.இ.தீவுகள் ஒரு கட்டத்தில் 37 பந்துகளில் 27 ரன்கள் தேவை 6 விக்கெட்டுகள் கையில் உள்ளன என்ற வலுவான நிலையில் இருந்து சஹலின் அற்புதமான லெக் ஸ்பின் பந்து வீச்சால் ஒரே ஓவரில் மீண்டும் 2 விக்கெட்டுகளை இழந்து அதே ஓவரில் ஒரு ரன் அவுட்டும் ஏற்பட்டு 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பாதையில் சென்றது.
ஆனால், சஹலுக்கு அடுத்த ஓவரைக் கொடுக்காமல் அடுத்த 3 ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து வீசச் செய்து இந்திய அணிக்குத் தோல்வியை தேடித் தந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. முதல் டி20 போட்டியிலும் இப்படியே, மே.இ.தீவுகள் பவர் ப்ளேயில் நன்றாக ஆடி வந்த போது சஹல் வந்து ஒரே ஓவரில் 2 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி அன்றும் திருப்புமுனை கொடுத்தார். ஆனால், அடுத்த ஓவர் அவருக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 149 ரன்களை எடுத்து பிறகு இந்திய அணியை மட்டுப்படுத்தி வென்றது.
விக்கெட் எடுக்கும் பவுலரை அதுவும் ஒரே ஓவரில் இருமுறை 2 விக்கெட்டுகளை எடுத்த பவுலரை தொடர்ச்சியாக இருமுறை அடுத்த ஓவரைக் கொடுக்காமல் கேப்டன்சி செய்யும் அளவுக்கு செயல்படுகிறார் ஹர்திக் பாண்டியா. முகேஷ் குமார் எந்த அடிப்படையில் அணியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருக்கு ஓவரைக் கொடுத்து ஆட்டத்தையே முடித்து விட்டார். கடைசியில் சஹல் 7 டாட்பால்களும், 3 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய அவரது பவுலிங் கோட்டாவை முடிக்காத நிலையில் ஆட்டம் முடிந்தது. அக்சர் படேலை அணியில் எடுத்து விட்டு அவருக்கு ஓவரே தரவில்லை. இதுவும் ஹர்திக் பாண்டியாவின் மேட்டிமைத்தனத்தின் விளைவா என்பதும் தெரியவில்லை.
இப்படி தப்பும், தவறுமாக செயல்படும் இவர்தான் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத் தலைவரா? ஏழையிலும் ஏழையான மே.இ.தீவுகள் வாரியத்தின் ஏற்பாடு சரியில்லை என்று ஊடகங்களிடம் புகார் மனு எழுப்பும் ஹர்திக், தனது இந்தத் குணாதிசயத்தை ஆட்டத்தில் காட்டினால் என்ன ஆகும்? இந்த இரண்டு டி20 போட்டிகளில் நடந்ததுதான் தொடர்ந்து நடக்கும்.
சஹலினால் தான் நேற்று 13 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகளுக்கு 129 ரன்கள் என்று தோல்வி நிலைக்கு வந்தது. அங்கிருந்து 7 பந்துகள் மீதம் வைத்து மே.இ.தீவுகள் வெல்லும் என்பதை ஹர்திக் எப்படி ஜீரணிக்கிறார்? பந்து வீச்சில் சிறப்பாக வீசிய அகில் ஹுசைன், அல்ஜாரி ஜோசப் 26 ரன்கள் கூட்டணி அமைத்து மேட்சை முடித்து விட்டனர்.
மேட்ச் முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி கொடுக்கையில், 8, 9, 10-ம் நிலையில் இறங்குபவர்களின் பேட்டிங் பலத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார். இது என்ன கருத்து? ஷுப்மன் கில் தடவுகிறார், இஷான் கிஷனுக்கு சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தையே ஆஃப் திசையில் அடிக்க முடியாமல் முதல் 4 பந்துகளை கோட்டை விட்டதைப் பார்க்கிறோம். சூர்யகுமார் யாதவ்வையும் இல்லாத ரன்னுக்கு அழைத்து ரன் அவுட் ஆக்கி விட்டார் இஷான் கிஷன். அது ஒரு அற்புதமான கைல் மேயர்ஸ் பீல்டிங் என்பது ஒரு புறம் இருக்கட்டும், அங்கு சிங்கிளே இல்லை. இதைக்கூட ஜட்ஜ் செய்ய முடியாத ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக இருக்கிறார். சஞ்சு சாம்சனுக்கான உருப்படியான டவுன் என்ன என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.
அதாவது மூத்த வீரர்களான கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஜடேஜா போன்றோர் வந்தால் எளிதில் வெளியேற்றக்கூடிய வீரர்களாகப் பார்த்து தேர்வு செய்யும் போக்கினால்தான் தோல்வி. இது ஏதோ வாய்ப்பில்லாத வீரர்களுக்கு வழங்கும் வாய்ப்பாகத் தெரியவில்லை. ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளித்தால் அவர் நிச்சயம் அதிரடி காட்டுவார். அதன் பிறகு ரோஹித் சர்மா எதற்கு என்ற கேள்வி அனாவசியமாக எழும். முகேஷ் குமார் தேர்வும் இப்படியாகத்தான் உள்ளது. முதலில் அணித்தேர்விலும் சிந்தனையிலும் இந்திய அணி நிர்வாகத்துக்கு நேர்மை இருக்க வேண்டியது அவசியம். இது இல்லை எனில் உலகக் கோப்பையில் 2007-ல் மே.இ.தீவுகளில் நடந்ததுதான் நம் சொந்த மண்ணிலேயே இந்திய அணிக்கு நடக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT