Published : 06 Aug 2023 07:29 AM
Last Updated : 06 Aug 2023 07:29 AM

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 2-வது டி20-ல் இந்தியா இன்று மோதல்

கோப்புப்படம்

கயானா: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் கைவசம் 6 விக்கெட்கள் இருந்த நிலையில் 30 பந்தில் 37 ரன்களை சேர்க்க முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அதேவேளையில் 149 ரன்களே சேர்த்த போதிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்தியது. டி20 தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் 2-வது ஆட்டம் கயானாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் நடுவரிசை பேட்டிங்கில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதில் தீவிரம் காட்டக்கூடும்.

ஏனெனில் முதல் ஆட்டத்தில் நடுவரிசை பேட்டிங் சரிவு காரணமாக இந்தியஅணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. மேலும் டாப் ஆர்டரில் இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும். தனது அறிமுக ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த திலக் வர்மாவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். வீரர்களின் பணிசுமையை கருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இந்த வகையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி டி 20 தொடரை வெற்றிகரமாக தொடங்கி இருந்தது. அந்த அணி மீண்டும் ஒரு முறை சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பவல் ஆகியோர் இந்திய பந்துவீச்சுக்கு சவால் தரக்கூடும்.

கயானா மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சாதனைகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இங்கு அந்த அணி 11 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் 3 ஆட்டங்களில் மழை காரணமாக முடிவுகள் கிடைக்கப் பெறவில்லை. மீதமுள்ள 8 ஆட்டங்களில் மேற்கு இந்தியத் தீவுகள் 5-ல் தோல்வி அடைந்துள்ளது.

நேரம்: இரவு 8 மணி

நேரலை: டிடி ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x