Published : 30 Nov 2017 10:36 AM
Last Updated : 30 Nov 2017 10:36 AM
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் இலங்கை அணியின் கேப்டனாக திசரா பெரேரா தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அந்த அணி ஆடுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளின் இறுதியில் இந்தியா, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி 2-ம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டி20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக திசரா பெரேரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை அந்த பொறுப்பில் இருந்த உபுல் தரங்கா நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளைத் தழுவி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணி, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த 3 தொடர்களிலும் இலங்கை அணி ஒரு போட்டியில்கூட ஜெயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 125 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள திசரா பெரேரா 1441 ரன்களைக் குவித்துள்ளார். 133 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT