Published : 05 Aug 2023 12:08 PM
Last Updated : 05 Aug 2023 12:08 PM

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் ஆண்டி ஃபிளவர்

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் சாம்பியன் கனவை அவர் மெய்பிப்பார் என்ற எதிர்பார்ப்பில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2008 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் 3 சீசனில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 5 முறை பிளே ஆஃப் சுற்றில் விளையாடி உள்ளது. அந்த அணியின் வீரர்கள், உரிமையாளர் மற்றும் ரசிகர்கள் என அனைவரது நெடுநாள் கனவாக இருப்பது ஐபிஎல் கோப்பை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் இருந்தார். அந்த அணி இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் லேங்கர் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தான் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை வென்ற அணியின் பயிற்சியாளரான ஆண்டி ஃபிளவரை ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக வரவேற்கிறோம். ஐபிஎல் மற்றும் உலகம் முழுவடிக்கும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் அணிகளின் பயிற்சியாளராக இயங்கிய அவரது அனுபவம் ஆர்சிபி அணிக்கு பெரிதும் உதவும் என அந்த அணி ட்வீட் செய்துள்ளது. இந்த பொறுப்பை அடுத்த 3 சீசனுக்கு அவர் கவனிப்பார் என தெரிகிறது.

டூப்ளசி உடன் மீண்டும் இணைவதில் தனக்கு மகிழ்ச்சி என ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஆர்சிபி அணியின் இயக்குநராக இயங்கிய மைக் ஹெசன் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஆகியோரின் பணியை மிகவும் மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களது ஒப்பந்தத்தை ஆர்சிபி அணி புதுப்பிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x