Published : 05 Aug 2023 07:54 AM
Last Updated : 05 Aug 2023 07:54 AM
தாரூபா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் விரைவாக 2 விக்கெட்களை இழந்தது பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் டிரினிடாட்டில் உள்ள தாரூபாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 150 ரன்கள் இலக்கைதுரத்திய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இஷான் கிஷன் 6, ஷுப்மன் கில் 3, சூர்யகுமார் யாதவ் 21, திலக் வர்மா 39 ரன்களில் ஆட்டமிழந்தனர்.கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 37 ரன்களே தேவையாக இருந்தன. கைவசம் 6 விக்கெட்களை வைத்திருந்த இந்திய அணி அதன் பின்னர் சரிவை சந்தித்தது.
16-வது ஓவரை ஜேசன் ஹோல்டர் மெய்டனாக்கினார். அதோடு ஹர்திக் பாண்டியாவை (19) போல்டாக்கினார். இதே ஓவரில் சஞ்சுசாம்சன் (12) ரன் அவுட் ஆனார். இது மேற்குஇந்தியத் தீவுகள் அணிக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஓபெட் மெக்காய் வீசிய 19-வது ஓவரில் அக்சர் படேல் (13) நடையை கட்டினார். எனினும் அர்ஷ்தீப் சிங் இருபவுண்டரிகளை விரட்டி நம்பிக்கை அளித்தார். ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் குல்தீப் யாதவ் (3), அர்ஷ்தீப் சிங் (12) ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமேற்கு இந்தியத் தீவுகள் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “இலக்கை துரத்தியபோது சரியான நிலையிலேயே இருந்தோம். சில தவறுகளை செய்தோம், அதற்கான பலனை பெற்றுள்ளோம். இளம் அணி தவறுகள் செய்யும்.
ஆட்டம் முழுவதையும் நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். டி 20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை இழந்தால், இலக்கை துரத்துவது கடினம். இதை எப்போதும் நான்நம்புகிறேன். நாங்கள் இரண்டு விக்கெட்டுகளை வரிசையாக இழந்தோம். அதுவே பாதிப்பாக அமைந்தது. திலக் வர்மா தனது இன்னிங்ஸைத் தொடங்கிய விதத்தைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். இரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் கயானாவில் நாளை நடைபெறுகிறது.
ஐசிசி அபராதம் விதிப்பு: முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக நடுவர்கள் புகார் கூறினர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஒரு ஓவரை குறைவாக வீசியிருந்தது. அதேவேளையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 ஓவர்களை குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 5 சதவீதமும், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு 10 சதவீதமும் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT