Published : 04 Aug 2023 06:06 AM
Last Updated : 04 Aug 2023 06:06 AM

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து | நாக் அவுட் சுற்றில் மொராக்கோ: ஜெர்மனி, தென் கொரியா வெளியேற்றம்

மொராக்கோ - கொலம்பியா அணிகள் இடையேயான போட்டி

பெர்த்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. ‘ஹெச்’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் மொராக்கோ - கொலம்பியா அணிகள் பெர்த் மைதானத்தில் மோதின. இதில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 45-வது நிமிடத்தில் அனிசா லஹ்மரி கோல் அடித்து அசத்தினார். மொராக்கோ அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. கொலம்பியா ஏற்கெனவே இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்ததால் அந்த அணியும் நாக் அவுட் சுற்றில் கால்பதித்தது. கொலம்பியா, மொராக்கோ ஆகிய இரு அணிகளும் தலா 6 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் கொலம்பியா தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.

‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி - தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தென் கொரியா தரப்பில் 6-வது நிமிடத்தில் சோ சோ-ஹியூன் கோல் அடித்தார்.

அதேவேளையில் ஜெர்மனி அணி சார்பில் அலெக்ஸாண்ட்ரா பாப் 42-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த இரு அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறின. ஜெர்மனி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. தென் கொரியா 2 தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்தது.

லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நாக் அவுட் சுற்று நாளை (5-ம் தேதி) தொடங்குகிறது. நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், நார்வே, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றுள்ளன. நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் நாளை சுவிட்சர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x