Published : 03 Aug 2023 06:45 AM
Last Updated : 03 Aug 2023 06:45 AM

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் இன்று தொடக்கம்: இந்திய அணி சீனாவுடன் பலப்பரீட்சை

பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள்.

சென்னை: ஆடவருக்கான 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தல் இன்று (3-ம் தேதி) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொள்கின்றன.

கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் 3 முறை சாம்பியனான இந்திய அணிக்கு உள்நாட்டில் நடைபெறும் இந்தத் தொடர் வரும் செப்டம்பர் இறுதியில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும் என கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரை முதன்முறையாக இந்தியா நடத்துகிறது.

உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு சீனாவுடன் மோதுகிறது. முன்னதாக பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியா, ஜப்பானுடன் மோதுகிறது. தொடர்ந்து 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மலேசியா, பாகிஸ்தானை சந்திக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக அணியில் உள்ள வீரர்களின் திறனை சோதிப்பதற்கும், மற்ற ஆசிய அணிகளின் பலம், பலவீனங்களை அறிவதற்கும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கக்கூடும். ஏனெனில் ஆசிய விளையாட்டு போட்டியானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதற்கான நேரடி வாய்ப்பை வழங்குகிறது.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களது ஆட்ட யுத்திகளை சோதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிய விளையாட்டுக்கு முன்னதாக தங்கள்வீரர்களை புத்துணர்ச்சியுடனும், காயங்களிலிருந்து பாதுகாத்து சமநிலைப்படுத்தும் செயலையும் இந்திய அணி மேற்கொள்ளக்கூடும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி இந்த ஆண்டில் தரவரிசையில் முன்னேற்றம் கண்டது. மற்றும் உலக அரங்கிலும் மதிப்பை பெற்றது. ஆனால் ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியால் 9-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 16 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் 9 ஆட்டங்களில் வெற்றி கண்டது. 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. 2 ஆட்டங்களை டிரா செய்தது.

ஸ்பெயினில் நடைபெற்ற 4 நாடுகள் ஹாக்கி தொடரில் பங்கேற்ற இந்திய அணி அடுத்த 3 நாட்களில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்குகிறது.

16 வருடங்களுக்குப் பிறகு: சர்வதேச ஹாக்கி போட்டி சென்னையில் 16 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் நடைபெறுகிறது. கடைசியாக 2007-ம் ஆண்டு மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி இறுதிப் போட்டியில் 7-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.

இந்திய அணியின் பயணம்: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 2011, 2016-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது. 2018-ம் ஆண்டு தொடரின் பட்டத்தை பாகிஸ்தானுடன் கூட்டாக பகிர்ந்து கொண்டது. இவை தவிர 2012-ம் ஆண்டு தொடரில் வெள்ளிப் பதக்கமும், 2021-ம் ஆண்டு தொடரில் வெண்கலப் பதக்கமும் இந்திய அணி கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2012, 2013-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது. 2021-ம் ஆண்டு தொடரில் ஜப்பானை வீழ்த்தி தென் கொரியா அணி சாம்பியன் ஆனது.

இந்திய அணி விவரம்

  • கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பஹதூர் பதக்.
  • டிபன்டர்ஸ்: ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜுக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ்.
  • நடுகளம்: ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங்.
  • முன்களம்: ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், எஸ். கார்த்தி.

‘தினமும் 100 மாணவர்கள்’: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “இந்திய ஹாக்கி அணியில் விளையாடிய பிரான்சிஸ் ரங்கநாதன் உட்பட அனைத்து முன்னாள் வீரர்களும் கவுரவிக்கப்படுவார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை போட்டியை காண அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் தொகுதியில் குறைந்தது 100 குழந்தைகளை அழைத்து வருமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

ஐபிஎல் ஃபேன் பார்க் போன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்படும், அவற்றில் இலசவசமாக பொதுமக்கள் போட்டிகளை கண்டு களிக்கலாம். அடுத்த ஆண்டுகேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடைபெறஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அட்டவணை

அணிகளின் செயல்பாடு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x