Published : 02 Aug 2023 03:52 PM
Last Updated : 02 Aug 2023 03:52 PM

நாமெல்லாம் ‘பாஸ்பால்’ அதிரடி ஆடினால் டீமை விட்டுத் தூக்கிடுவாங்க: அஸ்வின் மனம் திறப்பு

“இங்கிலாந்து கடைப்பிடிக்கும் அதிரடி பாஸ்பால் (Bazball) அட்டாக்கிங் பேட்டிங் முறையை இந்திய வீரர்கள் கடைப்பிடித்தால் அவ்வளவுதான், குறைந்தது 4 வீரர்களையாவது டீமை விட்டு தூக்கி வெளியே வீசி விடுவார்கள்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அதாவது இங்கிலாந்து வெற்றியோ தோல்வியோ, பேட்டர்களின் சக்சசோ, சொதப்பலோ வீரர்களை அவர்கள் பாதுகாக்கிறார்கள், இங்கு நடக்குமா என்று மனம் திறந்துள்ளார் அஸ்வின்.

யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், “இந்திய கிரிக்கெட் கலாச்சாரம் இத்தகைய அணுகுமுறையை ஏற்காது. அணித் தேர்வுக்குழுவினர் வீரர்களை பாதுகாக்க மாட்டார்கள்” என்கிறார். எனவே, இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பாஸ்பால் அணுகுமுறை உதவும்; இந்திய சூழ்நிலையில் உதவாது என்பதே அஸ்வின் கூறவருவதாகும்.

“நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை நன்றாக ஆடி வருகின்றோம் (?!). ஆனால் விரைவில் மாற்றங்களுக்கு உள்ளாகும் அணி. மாறும் காலக்கட்டத்தில் அனைத்தும் சுமுகமாக இருக்காது. நிச்சயம் இங்கும் அங்கும் சில பல பிரச்சினைகள் எழவே செய்யும். இந்த மாறும் காலக்கட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து போல் பாஸ்பால் அதிரடி பேட்டிங்கை கடைப்பிடிக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

வீரர்கள் இங்கிலாந்து வீரர் புரூக் போலவோ அல்லது மற்ற வீரர்கள் போலவோ வரும் பந்துகள் மீது மட்டையை வீசுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவுட் ஆகி, அதனால் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தால் என்ன ஆகும்? நாம் என்ன செய்வோம், ‘பாஸ்பால்’ முறையில் ஆடிய வீரரை தக்க வைப்போமா? அவ்வளவுதான்... விளையாடும் 11 வீரர்களில் குறைந்தது 4 வீரர்களையாவது அணியை விட்டு நீக்கி விடுவோம்.

இப்படித்தான் நம் கிரிக்கெட் பண்பாடு இருந்து வந்திருக்கிறது. மற்ற அணிக்கு சரியாக வருகிறது என்பதற்காக இன்னொரு அணியின் முறையை நாம் நகலெடுக்க முடியாது. இங்கிலாந்துக்கு ஒர்க் ஆகிறது என்றால் இங்கிலாந்து நிர்வாகம் முழுதும் இந்த அணுகுமுறையை ஏற்று வீரர்களையும் உற்சாகப்படுத்துகிறது. அணித் தேர்வாளர்களும் இப்படி ஆட ஊக்கமளிக்கின்றனர். இவர்கள் ஏன், இங்கிலாந்து ரசிகர்களே தோற்றாலும் வென்றாலும் இந்த அணுகுமுறையை ரசித்து மகிழ்கின்றனர். ஆனால் நாம் இதைச் செய்ய முடியாது” என்றார்.

உலகக் கோப்பை 2023-ல் வெற்றி பெறுவது பற்றி அஸ்வின், “உலகக் கோப்பையை வெல்வது என்பது சுலபமானதல்ல. ஒரு வீரரை அணியில் வைக்கிறோம். ஒருவரை ட்ராப் செய்கிறோம் போன்றவற்றினாலெல்லாம் நாம் உலகக் கோப்பையை வென்று விட முடியாது. எல்லாம் நடந்து முடிந்ததும் பிற்பாடு யோசிப்பதில் நாம் ராஜாக்கள். ஆனால் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்த பிற்பாடு யோசித்தல் வேலைக்கு ஆகாது. முக்கியத் தொடர்களிலெல்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறோம். ஆனால் அரையிறுதி தினத்தில் போதுமான அளவுக்கு நன்றாக ஆட முடியவில்லை” என்று அஸ்வின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x