Published : 02 Aug 2023 07:38 AM
Last Updated : 02 Aug 2023 07:38 AM

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆசிய விளையாட்டுக்கான பயிற்சியாக அமையும்: இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் கருத்து

இந்திய ஹாக்கி வீரர்கள்

சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஆசிய விளையாட்டு போட்டிக்கான பயிற்சியாக பயன்படுத்திக் கொள்வோம் என இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் தெரிவித்துள்ளார்.

ஆடவருக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (3-ம் தேதி) தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன. ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23-ம் தேதி சீனாவில் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று சென்னை வந்து சேர்ந்தது. விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் இந்திய அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் பிற்பகலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் கூறியதாவது:

ஆசிய விளையாட்டு போட்டியையொட்டி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. பெரிய அளவிலான தொடர் நடைபெற உள்ள நிலையில் குறுகிய கால இடைவெளியில் இந்த தொடரை சந்திக்கிறோம். ஆனால் எங்களுக்கு விளையாட்டுகள் தேவை. நாங்கள் விளையாடுவது முக்கியம். அதுவும் இந்தியாவில் நடைபெறுவது நல்ல விஷயம்.

நாங்கள் நேர்மறை மற்றும் எதிர்மறையான விஷயங்களை எதிர்நோக்குகிறோம். காயங்களை பொறுத்தவரை எந்த அணிக்கும் அல்லது வீரருக்கும் ஒருபோதும் நல்லதல்ல. எனவே தொடர் நடைபெறும் நேரத்தை நான் புரிந்துகொள்கிறேன். எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த பெனால்டி கார்னர் நிபுணர்கள் உள்ளனர். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களும் சிறந்தவர்களே. இந்த விஷயத்தில் எதிரணிகள் செய்ய முயற்சிப்பதையே நாங்களும் செய்ய முயற்சிக்கிறோம்,

சென்னை ஆடுகளத்தில் இனிமேல்தான் பயிற்சி மேற்கொள்ள உள்ளோம். ஆடுகளம் மெதுவாக செயல்பட்டால், எந்த அணிக்கும் சவாலாக இருக்கும். நாங்கள்எப்போதும் வேகமான ஆடுகளங்களை விரும்புகிறோம். ஆனால் இது புதியது என்பதால், அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எங்களிடம் சற்று வித்தியாசமான குழு உள்ளது. சில புதிய வீரர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள வீரர்கள் ஸ்பெயினில் விளையாடிவிட்டு வந்துள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபிதொடரை பயன்படுத்திக் கொள்வோம். இந்த தொடரில் கலந்துகொள்ளும் 25 பேர் அணியில் இருந்து ஆசிய விளையாட்டுக்கான வீரர்களை தேர்வு செய்வோம்.

இவ்வாறு கிரேக் ஃபுல்டன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x